தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 377 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருடன் ஆட்டத்தைத் துவக்கிய தென்ஆப்ரிக்கா, அனைத்து விக்கெட்களையும் இழந்து 281 ரன்களுக்கு சுருண்டது. நிடினி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சைத் துவக்கிய ஆஸ்ட்ரேலியா துவக்கத்திலேயே ஹைடனை இழந்தது. அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேட்டிச்-பாண்டிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. இதில் கேட்டிச் 37 ரன்களும், பாண்டிங் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மைக் ஹஸ்ஸி 8 ரன்களே எடுத்தார்.
மைக்கேல் கிளார்க் 25 ரன்கள், சைமண்ட்ஸ் 37 ரன்கள், பிரெட்லீ 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 3ம் நாள் ஆட்டம் முடிவில் ஹட்டின் 39 ரன்கள், கிரிஸ்ஜா 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களில் ஸ்டெய்ன், ஹாரிஸ், காலிஸ் தலா 2 விக்கெட்டுகளும், நிடினி ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
இப்போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலிய அணி 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.