இந்திய ஆஸ்ட்ரேலிய அணிகள் ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் தொடர்களை விளையாடுவது வீரர்களை அதிகமாக களைப்படையச் செய்யும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. தற்போது ஆஷஸ் தொடரைக் காட்டிலும் ஆஸ்ட்ரேலிய இந்திய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அனால், " கடந்த முறை ஆஸ்ட்ரேலியாவில் அபாரமான, போட்டி நிறைந்த ஒரு தொடரை இந்தியாவும் ஆஸ்ட்ரேலியாவும் விளையாடின, ஆனால் இந்த ஆண்டு முடிவதற்குள் மீண்டும் இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் மோதுவது வீரர்களை அதிகமாக களைப்படையச் செய்துவிடும்" என்று சுனில் கவாஸ்கர் பத்திரிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், "ஒரே விஷயத்தை அடிக்கடி நடத்திக் கொண்டிருந்தால் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதில் ஆர்வம் இழந்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.
ஆஸ்ட்ரேலிய-இங்கிலாந்து அணிகளிடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் இது போன்று நெருக்கமான தொடர்களாக அமைக்கப்படாமல், இரு அணிகளும் மிகப்பெரிய அளவில் தங்களை தயார் செய்துகொள்ள கால அவகாசம் கொடுத்து திட்டமிடப்படுகிறது, பார்டர்-கவாஸ்கர் கோப்பையும் அதனை பின்பற்றுவதே சிறந்தது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக கவாஸ்கர் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 2 மாத இடைவெளியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை குறிப்பிடுகிறார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி தங்களை தயார் செய்து கொள்ள முடியாமல் போய் தோல்வி தழுவியது என்று குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.