துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட், யூனிஸ் கான் ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியால் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 315 ரன்களைக் குவித்துள்ளது.
கிட் பிளை கோப்பைக்காக வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
தகுதிச் சுற்றில் இந்திய அணியிடம் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாக். அணி, இன்றைய போட்டியில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக அடித்தாடத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர் காம்ரான் அக்மல் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அதன் பிறகு இணைந்த சல்மான் பட்டும், யூனிஸ் கானும் மிகச் சிறப்பாக ஆடினர்.
யூனிஸ் கான் படுவேகமாக அடித்தாடி 99 பந்துகளில் 8 பெளண்டரிகளுடனும், 3 சிக்ஸர்களுடனும் 108 ரன்களைக் குவித்தார். மறுமுனையில் சல்மான் பட் 136 பந்துகளில் 12 பெளண்டரிகளுடனும் 3 சிக்ஸர்களுடனும் 129 ரன்களைக் குவித்தார்.
இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டிற்கு 32.3 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆடவந்த மிஸ்பா உல் ஹக் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது.