ஜாஹீர் கான், டேல் ஸ்டெய்ன் ஆகியோரின் அபார பந்து வீச்சால் சிறப்பாக ஆடிய டெக்கான் சேலன்சர்ஸ் அணியை பெங்களூருவின் ராயல் சேலன்சர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் இருபதுக்கு 20 போட்டிகளில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில், ஆட்டத்தின் இறுதி ஓவரில் டெக்கான் அணி 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அனில் கும்ளே வீசிய முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த பின்னர், அடுத்த 2 பந்துகளை சஞ்சை பாங்கர் சிக்ஸர்களாக விளாச ஆட்டம் பரபரப்பானது. ஆனால் அடுத்த 2 பந்துகளை கும்ளே மிகச் சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்ததால் பெங்களுரு அணி மூச்சைப் பிடித்துக் கொண்டு வெற்றிக் கோட்டை எட்டியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய பெங்களுரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. வாசிம் ஜாஃபர் 44 ரன்களும், கோளி 38 ரன்களும், திராவிட் 26 ரன்களும் எடுத்தனர். ருத்ர பிரதாப் சிங் 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
அடுத்து ஆடிய டெக்கான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. வெங்கட் சாய் லக்ஷ்மண் 52 ரன்களும், அதிரடி ஆட்டக்கார்ர் ரோஹித் சர்மா 56 ரன்களும் எடுத்தனர்.
ஜாஹீர் கான் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரவீன் குமார் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஸ்டெய்ன் மிகச் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
ஆட்ட நாயகன் பிரவீன் குமார்.