Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்த்தமற்ற டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் நாளை

அர்த்தமற்ற டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் நாளை
, வெள்ளி, 19 நவம்பர் 2010 (15:53 IST)
இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் அர்த்தமற்ற டெஸ்ட் தொடரின் 3-வதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆட்டக்களங்களால் எந்த விதப் பயனும் இல்லை என்பது அந்த டெஸ்ட் போட்டிகள் ஆடப்பட்ட விதத்தினால் நிரூபணமாகிறது.

ஜாகீர் கான் மட்டுமே விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளராக இந்திய அணியில் உள்ளார். ஆனால் அவரும் நாளைய டெஸ்ட் போட்டியில் இல்லை. ஹர்பஜன் சிங் பந்தை ஸ்பின் செய்வதை மறந்து விட்டார். மாறாக மட்டையைச் சுழற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ராகுல் திராவிட் சமீபத்தில் ஹர்பஜன் சிங் பேட்டிங்கைப் பற்றி புகழ்ந்து கூறுகையில் இவர்தான் தற்போதைய கேரி சோபர்ஸ் என்றார். அவர் எந்த அர்த்தத்தில் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. கேரி சோபர்ஸ் ஆல்-ரவுண்டர் என்ற பொருளில் கூறியிருந்தால் சோபர்ஸ் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றுபவர் என்று நாம் கூறுவோம்.

ஹர்பஜன்சிங்கும் லஷ்மணும் பெங்களூர் டெஸ்ட் போட்டியை காப்பாற்றினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள அணியை பந்து வீச்சாளர் ஒருவர் பேட்டிங்கில் காப்பாற்றுவார் என்பதை எதிர்பார்ப்பது சற்று கடினமாகவே உள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஒரு அணி 8ஆம் இடத்தில் உள்ள ஒரு அணியை வீழ்த்த இவ்வளவு சிரமம் கொள்கின்றனர் என்றால் தரநிலையில் ஒன்றும் இல்லை என்றுதான் பொருள்.

8ஆம் இடத்தில் இருந்தாலும் வங்கதேசத்திடம் உதை வாங்கிக் கொண்டு வந்தாலும் நியூஸீலாந்தின் இளம் பேட்ஸ்மென்கள் காண்பிக்கும் போட்டி மனப்பான்மையை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ராகுல் திராவிட், ஹர்பஜன் சிங்கிடம் ஒரு சோபர்சை காண்கிறார், என்றால் பேட்ஸ்மென்களில் ஒருவரைத் தூக்கி விட்டு இன்னொரு பந்து வீச்சாளரை அணியில் எடுக்க அணிக்கு அறிவுரை வழங்கலாமே?

இங்கு மட்டுமல்ல, மற்பலமாஅணிகளுக்குமஇதநிலைதான். டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தானை கடைசி நாளில் சுருட்ட முடியாமல் திணறி ஆட்டம் டிராவில் முடிந்தது.

டெஸ்ட் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ள இலங்கை 7ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய அணிக்கு எதிராக ஃபாலோ ஆன் வாங்கியது.

எனவே இந்தத் தரவரிசை என்பதெல்லாம் வெறும் மார்க்கெட்டிங் உத்தி, போகஸ் என்ற நாம் முடிவுக்கு வர முடியும்.

இந்திய ஆட்டக்கள தயாரிப்பாளர்கள் ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் என்றால் படுபயங்கர ஸ்பின் ஆட்டக்களங்களை இடுகின்றனர். மற்ற அணிகளுக்கு இடும் ஆட்டக்களம் ஏதோ அந்த அணிகள் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்து இடையில் ஏதோ கிரிக்கெட் ஆடுகின்றன என்ற பிம்பத்தையே தோற்றுவிக்கின்றன.

எது எப்படியிருந்தாலும் நியூஸீலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் டிரா செய்ததில் சில தவறுகள் இந்திய தரப்பிலும் உள்ளன. நியூஸீலாந்து பேட்ஸ்மென்களுக்கு எந்த வித நெருக்கடியையும் தோனி கொடுக்கவில்லை.

கள வியூகம் சுதந்திரமாக உள்ளது. ஒரு பந்து வீச்சாளர் ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளைக் கொடுக்கலாம் ஆனால் மீதி 4 பந்துகள் அச்சுறுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஆனால் நம் ஸ்ரீசாந்தோ 2, அல்லது 3 ரன்களை வழங்கும் பந்துகளை அதிகம் வீசுகிறார். டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் இரண்டிரண்டு ரன்களாக எடுக்க முடிகிறது என்றால் தோனிக்கு டெஸ்ட் கிரிக்கெட் கள வியூகம் பற்றி கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்றே தோன்றுகிறது.

ஆட்டக்களங்களும் தற்போதெல்லாம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லா மைதானங்களிலும் புதிய பிட்ச்கள் போடப்படுகின்றன. அது தார்ச்சாலை போல்தான் உள்ளது.

கிரிக்கெட் என்பது என்ன? பேட்டிற்கும் பந்திற்குமான ஒரு சவால். அதனை மறுக்கும் எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தையும், அதனை விளையாடுவது நம்பர் 1 அணியாக இருந்தாலும் நாம் பாராட்ட முடியாது.

சொந்த நாட்டில் விளையாடும் அணிகள் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற அணிகள் தாங்கள் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில்தான் மட்டை ஆட்டக்களங்களை தயாரித்து வருகின்றன. ஆனால் எதிரணியில் ஆட்டக்களம் பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்பின்னரோ, 145 கிமீ வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளரோ இருந்து விட்டால் இந்த ஆட்டம் தங்களுக்கு எதிராகத் திரும்பும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

பெங்களூரில் கிரிஸ் மார்டின் கண நேரத்தில் இந்தியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தியதும், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை ஃபாலோ ஆன் வாங்கியதும் நாம் மேற்கூறிய அபாயத்தால் விளைந்தவையே.

பந்துகள் நன்றாக எழும்பும் ஆட்டக்களம் அல்லது நன்றாக சுழலும் ஆட்டக்களங்களை உருவாக்கி அதில் திறமையை வெளிப்படுத்தி சவாலான கணங்களைக் கடந்து வெற்றி பெற்றிருந்தால் நம்பர் 1 இடத்தை நாம் பெருமையாகப் பார்க்கலாம்.

அந்த வகையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மொகாலியில் லஷ்மணின் அபார ஆட்டத்தினால் பெற்ற வெற்றிதான் உண்மையான வெற்றியாகும். அதாவது இந்த வெற்றியை மட்டும் குறிப்பிடவில்லை. இது போன்ற சவாலான வெற்றிகள்தான் அணியின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

அப்படிப்பட்ட வெற்றிகள்தான் நியூஸீலாந்து போன்ற அணியை ஊதித் தள்ளுவதற்கு உதவக்கூடும்.

ஷேன் வார்ன் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இருந்த ஆட்டங்கள் உண்டு. முரளிதரன் அதுபோல் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போன ஆட்டங்களும் உண்டு. ஆனால் இவர்களிருவரும் ஒருநாளும் மட்டையான ஆட்டக்களங்கள் பற்றி குறை கூறியது கிடையாது. இதுதான் தன்னம்பிக்கை.

இயன் சாப்பல், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், ஹேன்சி குரோனியே, இம்ரான் கான், கங்கூலி போன்ற சிறந்த கேப்டன்கள் யாரும் எந்த ஒரு பிட்சையும் குறை கூறியதில்லை.

ஆனால் நம் தோனியும், பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் பிட்சைக் குறை கூறுகின்றனர். என்னமாத்ரியான ஆட்டக்களம் வேண்டும் என்பதில் கேப்டனுக்கும் உரிமை உண்டு. தோனி அந்த உரிமையை செயல்படுத்த வேண்டியதுதானே?

இதனை ஏன் கூறுகிறோம் என்றால் இந்தியாவின் ஆட்டக்கள கமிட்டியில் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் அணித் தலைவராக இருந்தபோது நடந்த ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.

அதாவது சச்சின் தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்று இந்தியா டெஸ்ட் போட்டியிலும், ஒரு நாள் தொடரிலும் கடும் தோல்விகளைச் சந்தித்து திரும்பியிருந்த சமயம். இங்கு அடுத்தத்யாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே முதல் பந்து முதலே பந்துகள் திரும்பவேண்டும் என்ற நிபந்தனையை சச்சின் வைத்ததாக ஸ்ரீகாந்த் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஸ்ரீகாந்த் அது வேண்டாம் என்று எச்சரித்துப்பார்த்தார் முடியவில்லை. கேட்பது சச்சினாயிற்றே? விக்கெட்டுகளே பார்த்திராத தென் ஆப்பிரிக்க பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை தோற்கச்செய்தார்.

ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவில் வாங்கிய உதையால் இந்திய அணி அப்போது தன்னம்பிக்கை இழந்திருந்தது. அந்த நிலையில் எந்த ஆட்டக்களமாக இருந்தால் என்ன?

எனவே தன்னம்பிக்கையும் முயற்சியும் அதற்கேற்ற புத்தி கூர்மையும், உத்தியும் இருந்தால் எந்த ஆட்டக்களத்திலும் வெற்றி பெறலாம். பெரிய கேப்டன்கள் இதைத்தான் செய்தனர்.

அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற்றவர்கள்தான் பெரிய கேப்டன்கள் என்று கருதப்படுகின்றனர். தோனி பெரிய கேப்டனா அல்லது பந்து வீச்சு மற்றமும் சாதாரண ஃபீல்டிங் அமைப்பையும் மட்டுமே செய்யும் சாதா கேப்டனா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.

நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியை துவக்கம் முதலே வெற்றிக்கான ஆட்டமாக மாற்ற விளையாட வேண்டும். முதலில் திராவிடிற்கு ஓய்வு அளித்து விட்டு செடேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பளிப்பது வெற்றியை நோக்கிய ஒரு முன்னெடுப்பு முயற்சியாக அமையும்.

அதே போல் சச்சின் டெண்டுல்கரின் 50-வது சதம் என்ற ஒரு பெரிய விஷயமும் இந்திய அணியினரை திசைத் திருப்புகின்றது. சச்சினின் ஆட்டத்தையும் அது ஆமை வேகமாக்குகிறது. இந்தியா வெற்றி பெறவேன்டுமென்றால் சேவாகின் ஆட்டத்தை தொடர சச்சின் முன்வரவேண்டும்.

இந்த ஆட்டக்களங்களில் வேகமாக ரன்களைக் குவிப்பதன் மூலமே 5 நாட்களுக்குள் வெற்றி பெறும் நிலைக்கு டெஸ்ட் போட்டியைத் தள்ள முடியும். சேவாக் அடித்து நொறுக்கிவிட்டுச் சென்ற பிறகு சச்சினும் திராவிடும் காலைத் தூக்கிப்போட்டு பந்துகளை மட்டையின் கீழ் கொல்லும் உத்தியைக் கடைபிடிப்பது அணியின் வெற்றிக்கு உதவாது என்பதோடு அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்கவரும் குறைந்த ரசிகர்களையும் வெறுப்பேற்றுவதைத்தான் செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil