Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு அச்சம்; சிக்கலில் 2011 உலகக் கோப்பை!

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (13:20 IST)
webdunia photoWD
உலகை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சம் காரணமாக 2011ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகின்றன. போட்டிகள் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களினால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது மும்பையில் நடைபெற்ற மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களினால் மேற்கு நாடுகள் பாதுகாப்பு அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், துணைக் கண்டத்தில் இந்த உலகக் கோப்பை நடைபெறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

webdunia photoWD
இலங்கையிலும் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருவதால் அங்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு வாரியங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

சமீப காலமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வங்கதேச பயங்கரவாதிகளுக்கும் பங்கிருப்பதாக பேசப்படும் சூழலில் இந்த 4 துணைக்கண்ட நாடுகளும் வீரர்கள் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்படுத்தும் இடங்களாக பார்க்கப்படுகின்றன.

பாகிஸ்தானிலும் சரி, தற்போது இந்தியாவில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலாயினும் குறிப்பாக வெளி நாட்டினர் அதிகம் தங்கும் விடுதிகளைக் குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்த அச்சங்களை எழுப்புவது நியாயமானதே.


கிரிக்கெட் ஆஸ்ட்ரேலிய தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் நேற்று இது பற்றி கூறுகையில், மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு 2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்பு பிரச்சனைகள் நிச்சயமாக எழும் என்று முதல் முட்டுக்கட்டையை போட்டுள்ளார்.

அப்படி துணைக் கண்டத்திலிருந்து 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மாற்ற வேண்டுமென்றால் ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து நாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

webdunia photoWD
ஆனால் இது குறித்த கவலைகள் இன்னமும் விவாத அளவிற்கு செல்லவில்லை என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் எந்த முடிவாயினும் அது விரைவில் எடுக்கப்பட்டால்தான் 2011 உலகக் கோப்பை போட்டிகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலைக்கு கொண்டு வர முடியும் என்று ஒரு சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உணர்வதாகவும் தெரிகிறது.

முதலில், நின்று போன ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளே எங்கு நடைபெறும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே தன் பணபலத்தால் பங்களிப்பு செய்து வரும் இந்தியாவின் மதிப்பும் உலக அரங்கில் கேள்விக்குறியாகியுள்ளது.

கிரிக்கெட்டின் பண மையமான இந்தியாவை இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலை வைத்து மற்ற கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தானை செய்வது போல் தனிமைப்படுத்தினால் அது கிரிக்கெட் ஆட்டத்தையே பலமிழக்கச் செய்யும் என்பது உறுதி.

webdunia photoWD
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பண மற்றும் அதிகார மையம் குறித்து ஐ.சி.சி.யிலும், வெளியிலும் கேள்வி எழுப்பிவரும் ஒரு சில தன்னார்வ சக்திகள், மும்பை பயங்கரவாத தாக்குதல்களை காரணம் காட்டி இந்தியாவை ஓரம் கட்டி அதன் கிரிக்கெட்டை முடக்கும் முயற்சிகளிலும் ஈடுபடலாம்.


ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த முடிவுகள் சம்பந்தப்பட்ட அந்த இரு நாட்டு வாரியங்களின் இருதரப்பு விவகாரமே, இதில் ஐ.சி.சி. தலையிட முடியாது என்று ஐ.சி.சி. ஒப்பந்தங்களில் உள்ளது.

எனவே இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என்று ஆஸ்ட்ரேலியாவோ, இங்கிலாந்தோ, தென் ஆப்பிரிக்காவோ அல்லது எந்த ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியமோ முடிவு செய்தால் அதில் ஐ.சி.சி. தலையிட முடியாது.

பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக, உள் நாட்டு, பன்னாட்டு நெருக்கடிகளில் சிக்கிச் சீரழியும் வளரும் நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது இந்த பயங்கரவாதம் என்ற முகம் தெரியாத ஒரு அச்சுறுத்தல்.

இந்த நிலையில் மற்ற நாட்டு வாரியங்கள் ஒத்துழைப்பு நல்குவதே பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்க முடியும். மாறாக இதனை காரணம் காட்டி, பல்வேறு தன்னார்வ நலன்களுக்காக இந்தியாவையோ, பாகிஸ்தானையோ, இலங்கையையோ முடக்குவது என்ற செயல்பாடு கிரிக்கெட் ஆட்டத்திற்கு மட்டுமல்லாது, அதன் பொருளாதாரத்தையே முடக்கும் ஆபத்தான செயலாக போய் முடியும்.

ஐ.பி.எல்.லிற்கு முந்தைய இந்திய கிரிக்கெட், ஐ.பி.எல்.லிற்கு பின் இந்திய கிரிக்கெட் என்ற பேச்சுக்கள் மறைந்து, தற்போது மும்பை பயங்கரவாதத்திற்கு பிறகு இந்தியா, இந்திய கிரிக்கெட் போன்ற விவாதத் தலைப்புகள் மேற்கத்திய ஊடகங்களில் தோன்றியுள்ளன.

வரும் காலங்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் சவாலான காலக் கட்டம் என்பதில் ஐயமில்லை. எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்துள்ள இந்த தேசம் இதனையும் கடக்கும் என்று நம்புவோமாக.



எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!

நாங்கள் செய்த தவறை உங்கள் முன் விவாதிக்க முடியாது- கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஆர் சி பி அணிக்கு புதிய கேப்டன் யார்?... இன்று வெளியாகும் அறிவிப்பு!

Show comments