Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலிய அணியின் பலமும் பலவீனமும்!

Webdunia
அக்டோபர் 9-ம் தேதி முதல் இந்திய-ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் வீரர்கள் அனைவரும் புத்துணர்வுடன் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் ஆஸ்ட்ரேலிய அணி கடந்த முறை இந்தியா வந்து தொடரை கைப்பற்றிய பிறகு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னணி வீரர்களான கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஜஸ்டின் லாங்கர், டேமியன் மார்டின், காஸ்பரோவிச், ஜேசன் கில்லஸ்பி முக்கியமாக ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் இந்த தொடரில் இல்லை. அந்த அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டையை பிடிக்க வேண்டிய நேரத்தில் துடுப்பெடுத்து மீன் பிடிக்கச் சென்று அகப்பட்டார்.

அதனால் அவரும் அணியில் இல்லை. மிட்செல் ஜான்சன், பிரட் லீ, ஸ்டூவர்ட் கிளார்க், மெக்கெய்ன், க்ரெஜா ஆகியோர் இந்திய மண்ணிற்கு புதிது. அதனால் இந்த வீரர்களின் பலங்கள், பலவீனங்களை நாம் அலசி விடுவோம்:

அதனால் அவரும் அணியில் இல்லை. மிட்செல் ஜான்சன், பிரட் லீ, ஸ்டூவர்ட் கிளார்க், மெக்கெய்ன், க்ரெஸ்ஜா ஆகியோர் இந்திய மண்ணிற்கு புதிது. அதனால் இந்த வீரர்களின் பலங்கள், பலவீனங்களை நாம் அலசி விடுவோம்:

நாம் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்குடன் துவங்கலாம ்..

ரிக்கி பாண்டிங்:

உலக அளவில் இன்று மிகப்பெரிய பேட்ஸ்மெனாக வர்ணிக்கப்படுபவர் பாண்டிங் என்றால் மிகையாகாது. அதற்கு தகுதியானவரும் கூட. அனைத்து ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் போலவும் இவரது கிரிக்கெட் வாழ்வில் 30 வயதுக்கு மேல்தான் உச்சத்திற்கு சென்றார். அதாவது மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஆம்புரோஸ், கார்ட்னி வால்ஷ், இயன் பிஷப் போன்றவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே பேட்டிங்கில் இவரது ஆதிக்கம் உயர்ந்தது. அதன் பிறகு இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் இவருக்கு சில சதங்களை அள்ளி வழக்கியது என்றால் மிகையாகாது.

webdunia photoWD
119 டெஸ்ட்களில் 10,099 ரன்கள் சராசரி 58.37. 35 சதங்கள் 40 அரைசதங்கள் என்று நம்மை மிரட்டுகிறார். 2005-ஆம் ஆண்டு 1544 ரன்கள் எடுத்தார் இதில் ஒரே டெஸ்டில் இரண்டு சதங்கள் என்ற சாதனையை 3 முறை செய்தார். 2006-ஆம் ஆண்டும் இவருக்கு ஒரு பிரமாதமான ஆண்டு 1,333 ரன்கள் குவித்தார் இவர். 2007-ஆம் ஆண்டு மறக்கப்படவேன்டியது. 13 மாதங்களுக்கு ஒரு சதம் கூட இவர் எடுக்கவில்லை. அதன் பிறகு இந்தியாவிற்கு எதிராக மட்டை ஆட்டக்களமான அடிலெய்டில் ஒரு சதம் எடுத்தார். அதன் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 158 ரன்கள் எடுத்துள்ளார்.

அன்னாரது இந்திய மண் சாதனை புல்லரிக்கத்தகுந்தது. 8 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 172 ரன்களை 13 ரன்களுக்கும் குறைவான சராசரியுடன் பெற்றுள்ளார். 1996-ல் டெல்லியில் ஒரு 65 ரன்களை எடுத்தார் அதன் பிறகு அன்னாரது மட்டை இந்தியாவில் ஒன்றுக்கும் உதவாமல் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டதுதான் மிச்சம். இந்த முறை இந்தியாவில் தனது சராசரியை உயர்த்துவதாக சூளுரைத்துள்ளார். அதற்கு கும்ளேயும், இஷாந்தும், ஹர்பஜனும் மனது வைக்க வேன்டும். பார்ப்போம்... மிகப்பெரிய வீரர்கள் எப்போது தங்களது குகையிலிருந்து வெளியே வருவார்கள் என்று கூற முடியாது.

மேத்யூ ஹெய்டன்

உண்மையில் இந்தியாவை தனது வாயாலும், கையாலும் மிரட்டும் ஒரே ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென். குவீன்ஸ்லாந்து கண்டெடுத்த முத்து..., மேத்யூ ஹெய்டன். மேத்யூ என்பதற்கு பதிலாக மேஸிவ் (Massive) ஹெய்டன் என்று வைத்திருக்கலாம். தோற்றம் அப்படி. அடிக்க ஆரம்பித்தால் பந்து வீச்சாளர்கள் யாராக இருந்தாலும் ஓய்வறையில் இருக்கத்தான் விரும்புவார்கள். 94 டெஸ்ட்களில் 8242 ரன்கள்; சராசரி 53.51. சதங்கள் 30; எல்லாவற்றிற்கும் மேலாக கல்லி திசையில் அபாயகரமான ஃபீல்டர் 121 கேட்ச்களை பிடித்துள்ளார். துவக்க காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் டார்லிங் என்று இவர் கருதப்பட்டார். வால்ஷ், ஆம்புரோஸ், டொனால்ட், கிறிஸ் பிரிங்கிள், மெக்மில்லன் என்று மே.இ, தெ.ஆ வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை படுத்திய பாட்டில் அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.

webdunia photoWD
இவர் பெரிய அளவுக்கு பேசப்பட்ட காலம் ஸ்டீவ் வாஹ் தலைமையில் 2000- 01 ஆம் ஆண்டு இந்திய தொடருக்கு வந்த போது 3 டெஸ்ட்களில் நம் வீச்சாளர்களை "ஸ்லாக் ஸ்வீப்" செய்தே 549 ரன்களை விளாசினார். சென்னை இரட்டை சதம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதன் பிறகு இவருக்கு ஏற்றம்தான். 2004- 05-ல் சரிவுகளைக் கண்டார் ஹெய்டன். ஆஷஸ் தொடரை இழந்தது ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிலும் இவரது பேட்டிங் ஒன்றும் சோபிக்கவில்லை. ஆனால் கடைசியாக இந்தியா ஆஸ்ட்ரேலியா சென்ற போது தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து நம்மை மிரட்டினார். இவரது ஆட்டம் பொறுத்தே ஆஸ்ட்ரேலியாவின் வெற்றியும் தோல்வியும் என்றால் அது ஒரு போதும் மிகையல்ல.

ஃபில் ஜாக்

இடது கை துவக்க ஆட்டக்காரரான ஃபில் ஜாக், ஜஸ்டின் லாங்கர் ஓய்வு பெற்ற பிறகு போராடி ஆஸ்ட்ரேலிய அணியில் தன் இடத்தைப் பிடித்தவர். இயல்பாகவே அடித்து ஆடக்கூடியவர். உள் நாட்டு கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்டிற்கு ஒப்பாக கருதப்படும் பேட்ஸ்மென்.

இலங்கை அணிக்கு எதிராக தன் முதல் டெஸ்டிலேயே சதம் எடுத்தவர். 11 டெஸ்ட் போட்டிகளில் 902 ரன்களை 47.47 என்ற சராசரியுடன் எடுத்துள்ளவர். ஆஸ்ட்ரேலியாவின் கடினமான, பந்துகள் எழும்பும் வேகப்பந்து வீச்சிற்கு சா

தகமான ஆட்டக்களத்தில் சிறந்த வீரர். மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற போது அங்கும் நிதானமாக விளையாடி சுமாராக ரன்களை எடுத்துள்ளார். இந்தியா அவருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே திகழும். சுழற்பந்து களத்தில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடிய அனுபவம் இல்லாதவர். ஆனாலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் முதல் 20- 25 ஓவர்களில் அரைசதத்தை நெருங்கிவிட்டாரேயானால் அதன் பிறகு ஸ்பின்னர்களை ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். எதையும் முன் கூட்டி கணிக்க முடியாத வீரர்.

மைக்கேல் கிளார்க்

இந்தியாவிற்கு எதிராக பெங்களூரில் 2004- 05 டெஸ்ட் தொடரில் சதம் எடுத்து அந்த போட்டியை ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற ஒரு வகையில் வித்திட்டவர் என்று கூறலாம். துவக்கத்தில் எழுச்சி, பிறகுக் மத்தியில் மந்தம் பிறகு அணியிலிருந்து நீக்கம், மீண்டும் அயராத உழைப்பு, மீண்டும் ஆஸ்ட்ரேலிய அணியில் இடம்பெற்றது ஆகியவையே இவரது கிரிக்கெட் வாழ்வு இதுவரை.

webdunia photoWD
ஆஸ்ட்ரேலியாவின் இன்னொரு மார்க் வாஹ் என்று பண்டிதர்களால் வர்ணிக்கப்படும் அளவிற்கு ஆஃப் மற்றும் ஆன் திசைகளில் இவர் ஆடும் டிடிரைவ்கள் பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். தற்போதைய ஆஸி. அணியில் ஸ்டைலிஷ் வீரர் என்று இவரை அழைக்கலாம். பந்து வீச்சிலும் இந்தியாவிற்கு எதிராக நன்றாக வீசி பாடாய் படுத்தியுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. நல்ல ஃபீல்டர். ஆனால் அழுகுணி கொஞ்சம் அதிகம்தான்.

35 டெஸ்ட்களில் 2,212 ரன்களை 47.06 என்ற சராசரி விகிதத்தில் பெற்றுள்ளார். 7 சதங்கள் 8 அரைசதங்கள். இந்தியாவிற்கு எதிராக மும்பையில் 9 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிட்னி டெஸ்டில் கடைசி 3 இந்திய வீரர்களை வீழ்த்தி அழுகுணி டெஸ்டில் தன் பங்கை சரியாகச் செய்தவர். இவர் சுழற்பந்துகளை நன்றாக விளையாடக்கூடியவர்தான். ஆனால் ஹர்பஜன்,கும்ளேயிடம் திணறி வந்துள்ளார். பொறுத்திருந்து பார்க்கவேன்டிய வீரர், எப்படியும் ஓரிரு சதங்களை இந்த தொடரில் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

மைக்கேல் ஹஸ்ஸி

ஆஸ்ட்ரேலியாவின் அடுத்த பிராட்மேன் என்று கருதப்படுபவர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அபாயகரமான வீரர். இவர் நினைத்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உடையவர். மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் இவர் முதன் முதலாக இந்திய மண்ணில் டெஸ்ட் ஆடுகிறார்.

தற்போதைய ஆஸ்ட்ரேலிய அணியில் அதிகபட்ச சராசரியான 68.38 வைத்திருப்பவர். இங்கிலாந்து 5- 0 என்ற தோற்ற ஆஷஸ் தொடரில் 4 அரைசதங்களை அடுத்தடுத்து எடுத்து பெர்த் டெஸ்டில் சதம் எடுத்தார். ஒரு முறை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக கிளென் மெக்ராவை வைத்துக் கொண்டு அவருடன் கடைசி விக்கெட்டுக்காக 107 ரன்களை குவித்து படுத்தி எடுத்தார். ஆனால் தனது ஆட்டத்திறனுக்கு ஏற்ப சமீப காலங்களில் இவர் ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. 25 டெஸ்ட்களில் 2,325 ரன்களை 8 சதங்கள் 9 அரைசதங்களுடன் பெற்றுள்ளார். இவரிடம் உள்ள மற்றுமொரு திறமை என்னவெனில் பேட்டிங் வரிசையில் துவக்க வீரர் நிலையிலிருந்து எந்த வரிசையிலும் களமிறங்கும் திறன் படைத்தவர். மனது வைத்து ஆடினாரேயானால் இவர் விக்கெட்டை எடுப்பது கடினம்தான். அபாயமான வீரர்.

சைமன் கேடிச்

ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழுவின் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பான கடினமான வீரர்கள் தேர்வுக் கொள்கைக்கு இரையான ஒரு வீரர் என்றால் மிகையாகாது. நன்றாக விளையாடிய போதும் அணியிலிருந்து தூக்கப்பட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவர் இருந்திருந்தால் படுத்த படுக்கையாகும் வரை தேசிய அணியில் இருந்திருப்பார். இவரது திறமைக்கேற்ற பலன் இவருக்கு கிடைக்காத துரதிர்ஷ்டமான வீரர்.

சராசரி என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. 26 டெஸ்ட்களில் 1579 ரன்களை 39 என்ற சராசரியுடன் இவர் பெற்றுள்ளார். 4 சதங்கள், 8 அரைசதங்கள். 2007- 08இல் உள் நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி தனது தலைமையின் கீழ் நியூசவுத்வேல்ஸ் அணிக்கு புரா கோப்பையை பெற்றுத் தந்தார்.

அணித்தலைமைக்கான வீரர் இவர், ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்தப்படும் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவோ இவருக்கு பதிலாக மைக்கேல் கிளார்க்கையும், பில் ஜாக்கையும் தேர்வு செய்தனர். இந்தியாவிற்கு எதிரான இந்தியாவில் நடைபெற்ற கடந்த தொடரில் நன்றாகவே விளையாடினார். தற்போது மேற்கிந்திய தொடரில் ஹெய்டன் இல்லாததால் அணியில் சேர்க்கப்பட்டார். அங்கும் ஓரிரு சதங்களை அடித்தார்.

இம்முறை இவர் அணியில் இடம்பெறுவது கடினம்தான். ஏனெனில் ஹெய்டன், ஜாக், பாண்டிங், கிளார்க், ஹஸ்ஸி-க்கு அடுத்தபடியாக சைமன்ட்ஸ் இல்லாததால் ஷேன் வாட்சனைத்தான் ஆஸி. தேர்வு செய்யும், ஏனெனில் அவர் ஆல் ரவுண்டர். ஆனால் கேடிச்சும் சைனாமென் பந்துகளை வீசக்கூடியவர்தான். வாய்ப்பு குறைவு. ஆனால் நம்மைப் பொறுத்தவரை இவர் அணியில் இல்லாமல் இருப்பதே நல்லது.

ஷேன் வாட்சன்

திறமையான இளம் வீரர் 27 வயதுதான் இவருக்கு ஆகிறது. பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என்று அனைத்திலும் திருப்திகரமாக திறமை காட்டக்கூடியவர். சைமன் கேடிச்சை காட்டிலும் இவருக்கு அதிக வாய்ப்பிற்கு கார்ணம் கேடிச்சிற்கு வயது 33 என்பதே. கேடிச் இவரை விட சிறந்த பேட்ஸ்மென் என்பதில் ஐயமில்லை.

பேட்டிங்கை பொறுத்த வரை இவருக்கு திறமை உள்ளது என்ற கேப்டனின் நம்பிக்கைதான் இவரை காப்பாற்றி வருகிறது. ஏனெனில் வெறும் 3 டெஸ்ட்களையே ஆடியுள்ளார். 81 ரன்கள் சராசரி 20; பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளையே எடுத்துள்ளார்.

ஆனால் அந்த குறிபிட்ட தினத்தில் இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற எதிர்பார்ப்பை அளிப்பவர். இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும், அல்லது இவரையும் கேடிச்சையும் சுழற்சி முறையில் பயன்படுத்த ஆஸ்ட்ரேலியா முடிவெடுக்கலாம்.

விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின்!

கில்கிறிஸ்ட் ஓய்வு பெறுவதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர். கில்கிறிஸ்டின் பலதரப்பட்ட திறமைகளுக்கு முன் இவர் ஒன்றுமில்லைதான். ஆனால் கில்கிறிஸ்ட் கடைசி காலங்களில் விக்கெட் கீப்பிங்கில் சோடை போனார்.

குறிப்பாக பெர்த் டெஸ்டில் லக்ஷ்மணுக்கு 2-வது இன்னிங்சில் கேட்சை கோட்டை விட்டு மேட்சையும் கோட்டை விட்டார். ஆனால் அவரும் அப்போதே ஓய்வையும் அறிவித்து விட்டார். அந்த ஆகிருதியின் இடத்தில் இவர் பெரிதாக தெரியாவிட்டாலும், இவரிடம் தனிப்பட்ட திறமைகள் உண்டு. கில்கிறிஸ்ட் போன்ற் ஆட்டத்தின் போக்கை மாற்றும் இன்னிக்சை இவர் ஆடவேண்டும் ஆஸ்ட்ரேலிய அணி எதிர்பார்க்காது.

ஆனால் விக்கெட் கீப்பிங் பிறழாமல் இருப்பது அவசியம், பேட்டிங்கில் பயௌள்ள பங்களிப்பை செய்தால் போதுமானது. இதனை இதுவரை சரியாக செய்து வரும் ஒரு வீரர். மனோ பலம் மிக்கவர். நினைத்தால் இயன் ஹீலி போன்ற ஒரு சிறந்த விக்கெட் கீப்பராக வரும் திறமை உடையவர். 3 டெஸ்ட்களைதான் ஆடியுள்ளார். 16 கேட்ச்களை பிடித்துள்ளார். இந்தியா இவருக்கு ஒரு பெரிய சவால்தான்.

பிரட் லீ

31, வயது நிரம்பிய ஆஸ்ட்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர். உலகின் அதிவேக வீச்சாளர் என்றும் எக்ஸ்பிரஸ் பௌலர் என்றும் அழைக்கப்படுபவர். ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸ்ட்ரேலியா அணிக்குள் நுழைந்த இவர் முதல் 7 டெஸ்ட்களில் 42 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பிறகு முழங்கை காயம் ஏற்பட்டது. கடைசியாக இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக 9 டெஸ்ட்களில் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வயதானாலும் வேகம் குறையவில்லை. 68 டெஸ்ட் போட்டிகளில் 289 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 29.58 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரி வைத்துள்ளார்.

webdunia photoWD
ஸ்ட்ரைக் ரேட் என்று அழைக்கப்படும் எவ்வளவு பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுக்கப்படுகிறது என்ற கணக்கின் படி பார்த்தால் 51 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற அடிப்படையில் வீழ்த்தி வருகிறார். அதாவது 8 ஓவர்களுக்கு ஒரு விக்கெட். இவருக்கு மட்டுமே விக்கெட் விழுகிறது என்று ஒரு போட்டியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் 10 விக்கெட்டுகளை வீழ்த்த 80 ஓவர்கள் இவருக்கு தேவைப்படும். 5 விக்கெட்டுகளை வீழ்த்த 40 ஓவர்கள் தேவைப்படும். எனவே இவர் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் எந்த அணியும் 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லை. முதல் இரண்டு விக்கெட்டுகள் பிறகு நடுவே ஒன்று, பின்னால் களமிறங்குபவர்களில் இரன்டு விக்கெட்டுகள். இப்படித்தான் எடுத்து வருகிறார்.

ஆட்டத்திறனைக் காட்டிலும் இவரைப்பற்றிய ஊதிப்பெருக்கல்கள் அதிகம். ஒரு ஓவருக்கு குறைந்தது இரண்டு பந்துகளையாவது "த்ரோ" செய்து பேட்ஸ்மெனை நிலை குலையச் செய்வார். வென்கட்ராகவன் நடுவராக இருந்த போது இவர் "த்ரோ" செய்கிறார் என்று ஐ.சி.சி-யிடம் புகார் அளித்தார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இன்றளவில் இல்லை.

ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னமும் ஒரு முறை கூட 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. மெக்ரா, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஏன் ஷோயப் அக்தர் செய்தது போல் ஒரு முறை கூட ஒரு இன்னிங்சில் 7 அல்லது 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்றால் அதுவும் இல்லை.

சேவாக் இல்லாதபோது இந்தியாவிற்கு எதிராக கடந்த தொடரில் நன்றாகவ் வீசினார். பெர்த், அடிலெய்டில் சேவாக் ஆடிய போட்டியில் இவரது பந்து வீச்சு எடுபடவில்லை. சேவாக் இவரது பந்து வீச்சை குலைக்கும் திறன் உள்ளவர். அதே போல் லக்ஷ்மண். இந்தியாவில் இவருக்கு இதுவே முதல் டெஸ்ட் தொடர். வெறும் வேகம், நல்ல அளவு, திசை ஆகியவை இவரது பலம். பலவீனம் என்று பார்த்தால் ரன் கொடுக்க ஆரம்பித்தால் கட்டுப்படுத்த முடியாது.

ஸ்டூவர்ட் கிளார்க்

28 வயக்டு நிரம்பிய இவர் நியூசவுத்வேல்ஸ் அணியிலிருந்து ஆஸ்ட்ரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். 2006-ஆம் ஆண்டு கேப்டவுனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட். கடைசியாக ஆடிய டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்.

இதற்கிடையே 18 டெஸ்ட்களில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் ஒன்றில் சராசரியாக 4 அல்லது அதற்குக் மேலாக விக்கெட்டுகளை வீழ்த்தும் எந்த ஒரு வீச்சாளரும் அபாயகரமான வீச்சாளர்தான். அந்த வகையில் இவர் அபாயகரமானவர். பெரும்பாலும் ஸ்விங், அளவு மற்றும் திசை ஆகியவற்றை நம்பியே பந்து வீசுவார். கிளென் மெக்ரா பிற்காலத்தில் கடைபிடித்த பந்து வீச்சு முறையை இவர் தன் ஆரம்ப காலத்திலேயே கடைபிடிக்கிறார்.

இவரது பந்து வீச்சு சராசரி 21.46. தென் ஆப்பிரிக்க தொடர், ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் இவர் மெக்ராவிற்கு சிறந்த மாற்று என்பது போல் வீசினார். கடந்த முறை இந்தியா ஆஸ்ட்ரேலியா சென்றிருந்த போது இவர் பந்து வீச்சை இந்திய வீரர்கள் ஓரம் கட்டினர். அடிலெய்டில் சேவாக் இவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பந்துகள் சரியான அளவில் விழ ஆரம்பித்தது என்றால் இவர் பிரட் லீயை விடவும் அபாயகரமானவரே.

மிட்செல் ஜான்சன்

இவர் ஆஸ்ட்ரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 26 வயது நிரம்பியவர். குவீன்ஸ்லாந்து அணியிலிருந்து ஆஸி. அணிக்கு வந்தவர். ஆரம்பத்தில் ஒரு நாள் போட்டிகள் சிலவற்றில் இவர் ஒரு அடுத்த வாசிம் அக்ரம் என்பது போல்தான் வீசினார்.

webdunia photoWD
அடுத்தடுத்து வந்த போட்டிகளில் சரியாக சோபிக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மற்ற ஆஸ்ட்ரேலிய புதிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒப்பிடும்போது இவரது முன்னேற்றம் மந்த கதியில் இருந்து வருகிறது. 9 டெஸ்ட்களில் 34 விக்கெட்டுகளையே எடுத்துள்ளார்.

இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இன்னமும் வீழ்த்தவில்லை. மணிக்கு 150கிமீ வேகத்தில் வீசும் திறமையிருந்தும், இவரது அளவு மற்றும் திசை எப்போதும் திசைமாறி விடுகிறது. 2007-ல் இலங்கை அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் முதல் டெஸ்டை ஆடினார். டெனிஸ் லில்லி இவரை, "10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அற்புதம்" என்று வர்ணித்தார். ஆனால் இவர் அருமையாக வீசினால் அதுவே அற்புதம் என்ற நிலை உருவாகிவிட்டது.

கடந்த இந்திய தொடரின் போது இவர் ஒன்றும் பெரிதாக இந்தியர்களை அச்சுறுத்தவில்லை. மாறாக அவர்தான் பயந்து போனார். எப்படியும் இவர் அணியில் இருந்துதான் ஆகவேண்டும். இந்திய களங்கள் இவருக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும். இவரது பலம்- பின் களத்தில் இறங்கி அனாயாசமாக மட்டை சுழற்றுவார்.

பிரைஸ் மெக்கெய்ன்

36 வயது, விக்டோரியா அணி லெக் ஸ்பின்னர். ஷேன் வார்ண் ஓய்வு பெற்ற பிறகு ஆஸ்ட்ரேலிய ஊடகங்களில் அடிபடும் இரண்டு, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

இன்னொருவர் கஸ்ஸான் இவர் பிராட் ஹாக் போன்று இடது கை சைனாமென் வீசுபவர், ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதால் துச்சமாக தூக்கி எறியப்பட்டார். கஸ்ஸானுக்கு பிறகு மெக்கெய்னை இந்த தொடருக்கு தேர்வு செய்துள்ளனர். வேறு வழியில்லாததால் தேர்வு செய்யப்பட்டவர் போல்தான் தெரிகிறது.

இந்திய மண்ணில் பந்து வீச கிடைத்த ஒரே வாய்ப்பும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா ஏ அணிக்கு எதிராக ஆஸ்ட்ரேலியா ஏ அணி ஹைதராபாதில் விளையாடிய 3 நாள் டெஸ்ட் போட்டியில் இவர் அணியில் இருந்தார். ஒரு பந்து கூட வீசமுடியவில்லை. 36 வயது நிரம்பியும் ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு கிரிக்கெட்டில் 19 முதல்தர போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். வெறும் 57 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார்.

இவருக்கு பதிலாக கேமரூன் ஒயிட் என்ற லெக்ச்பின் ஆல்ரவுண்டர்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கவேண்டும். மீண்டும் ஆஸ்ட்ரேலிய தேர்வுக் குழுவின் குயுக்தியான போக்குகளால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய வீரர்களும் அஜந்தா மென்டிஸ் வருகைக்கு பிறகு சுழற்பந்து வீச்சிற்கு மடியும் போக்கை வளர்த்துக் கொண்டுள்ளதால் மெக்கெய்ன் நம்பிக்கை பெறலாம்.

ஜேசன் கிரெஜா

இவர் 25 வயது நிரம்பிய இளம் ஆஃப் ஸ்பின்னர். நியூசவுத்வேல்ஸ் அணிக்கும், டாஸ்மேனியா அணிக்கும் விளையாடியுள்ளார். இந்திய மண்ணில் துணைக்கண்ட நாடுகளின் ஆஃப்ஸ்பின்னர்களை தவிற ஒருவரும் இது வரை வெற்றி பெற்றதில்லை.

பாகிஸ்தானின் டாசிஃப் அகமட், சக்லைன் முஷ்டாக், முரளிதரன் தவிர இங்கு ஆஃப் ஸ்பின்னருக்கு அதிகம் வேலையில்லை. ஆஸ்ட்ரேலியா கெவின் ராபர்ட்சன் என்பவரி அழைத்து வந்து உதைபட்டது. கொலின் மில்லரும் சரியான உதை வாங்கினார். ஆனால் மீண்டும் கிரேஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவின் பார்வை சரியானதுதான் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான அட்டக்களத்தில் விக்கெட்டுகளி எடுக்க முடியவில்லை என்றால் பின்பு பந்து வீச லாயக்கில்லை என்றுதான் அர்த்தம் என்று சிந்திக்கின்றனர் அவர்கள். சரியிஆன அணுகுமுறைதான். 23 முதல் தர போட்டிகளில் 43 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

இவரது பலம் இவரது சுமாரான பேட்டிங் 4 முதல் தர கிரிக்கெட் அரைசதங்களை எடுத்துள்ளார். நன்றாக பாடுவாராம், கிதார் இசைப்பாராம்; அனேகமாக நிரந்தர பாடகராகவும், கிதார் இசைக்கலைஞராகவும் வாய்ப்பு இருக்கிறது.

டக் போலிங்கர்

27 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர். இடது கை பேட்ஸ்மென். நியூசவுத்வேல்ஸ் அளித்துள்ள கொடை. கடந்த புரா கோப்பை உள் நாட்டு கிரிக்கெட்டில் 3 ஆட்டங்களில் ஆடாவிட்டாலும் 45 விக்கெட்டுகளை 15.44 என்ற சராசரியில் வீழ்த்தினார்.

நியூசவுத்வேள்ஸ் அணி புரா கோப்பையை வெல்ல முக்கிய காரணம் இவரது பந்துவீச்சு. பலமான மேற்கு ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக 10விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் டாஸ்மேனியா அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 45 முதல் தர போட்டிகளில் 137 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நல்ல வேகத்துடன் துல்லியமான திசை மற்றும் அளவுகளில் பந்து வீசக்கூடியவர்.

முதலில் பாடுபட்டு விக்கெட் வீழ்த்தும் ஒரு வீச்சாளராக இருந்த இவர் அகாடமி பயிற்சிக்குப் பிறகு பளப்பான புதிய பந்தில் அபாயகரமான ஒரு வீச்சாளராக தேர்ச்சி பெற்றுள்ளார். மிட்செல் ஜான்சன் ஒழுங்காக வீசவில்லை எனில் உடனடியாக இவர் அந்த இடத்தை பிடித்துக் கொள்ள தயாராயிருப்பவர். இடது கை வேகப்பந்து வீச்சிற்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் திணறி, மோசமான தோல்விகளை பெற்றுள்ளனர், அந்த வகையில் ஒரு அதிர்ச்சித் தேர்வாக முதல் டெஸ்டிலேயே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பீட்டர் சிடில்

தற்போதைய ஆஸ்ட்ரேலிய அணியில் குறைந்த வயதுடைய வீரர் இவர்தான் இவருக்கு 23 வயதே ஆகிறது. ஆஸ்ட்ரேலியா கூர்ந்து கவனித்து வரும் ஒரு வளர்ந்து வரும் அபாயகரமான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் இவர் என்றால் மிகையாகாது.

தனது 14-வது வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய இவர், மானில 17 வயதுக்குட்பாட்டோர் போட்டியில் 47 ரன்கள் கொடுத்து 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவரது வேகம் மற்றும் தோள்பட்டை சுழற்று முறையால் அடிக்கடி காயமடைகிறார். இதனால் 2006- 07 முழு உள் நாட்டு கிரிக்கெட் சீசனையும் துறந்தார்.

கடந்த சீச‌னில் முதல் 5 போட்டிக‌ளில் 15.75 என்ற சராசரியுடன் 33 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு ஆஸ்ட்ரேலிய அணியை 77 ரன்களுக்கு சுருட்டினார். 11 முதல் தரப்போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது அரிது. எதேச்சையாக வாய்ப்பு கிடைத்தால் அதனை அப்படியே பற்றிக் கொள்ளும் திறன் உடையவர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

Show comments