Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஜாதாவின் கற்பூரத்தை காப்பியடித்தாரா ப்ரியதர்ஷன்?

ஜே.பி.ஆர்
வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (09:18 IST)
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய, 'திரைக்கதை எழுதுவது எப்படி' என்ற புத்தகம், மணிரத்னத்தின் முன்னுரையுடன் 2002 டிசம்பரில் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. திரைக்கதையின் பல்வேறு அம்சங்களை அதில் அலசியிருந்த சுஜாதா, ஒரு மாடல் திரைக்கதையும் அதில் தந்திருந்தார். முழுவதுமல்ல, ஒரு திரைக்கதை 90 பக்கங்களை கொண்டிருந்தால், முதல் முப்பது பக்கங்கள் மட்டும். திரைக்கதையின் பெயர், கற்பூரம்.
 

 
காமம், நகைச்சுவை, நயவஞ்சம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என்று நவரசங்கள் தூவிய அசலான சினிமா பொங்கல், கற்பூரம். கதையின் நாயகன் கற்பூரம் ஒரு வெள்ளந்தி. அப்பன் பெயர் தெரியாதவன். அவன் மனைவி சொர்ணா. குணம் பித்தளை.
 
வயக்காட்டில் சொர்ணாவும், ராசரத்தினமும் விஷமம் செய்து கொண்டிருக்கிறார்கள். கற்பூரம் அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்ததும், சொர்ணா ஜாக்கெட் ஹுக்கை சரி செய்தபடி எழுகிறாள். ராசரத்தினம் அவனிடம் பத்து ரூபாய் தருகிறான். 
 
கற்பூரம் - "இது எதுக்குங்க?"
 
சொர்ணா - "கால்ல முள்ளு குத்திருச்சு எடுத்துவுட்டாரு."
 
கற்பூரம் - "நான் எடுத்துவுட மாட்டேனா? எதுக்கு அவரைப் போய்த் தொந்தரவு பண்ணிகிட்டு?"
 
ராசரத்தினம் - "தொந்தரவே இல்ல. எப்ப வேணா வாம்மா."
 
சுஜாதா, ரசிர்களின் பல்ஸ் அறிந்தவர். ராசரத்தினத்தின் வீட்டு டிவியை கற்பூரம் சரி செய்யும் போது கற்பூரம், ராசரத்தினம் உரையாடல் தொடர்கிறது. மனைவி தன்னை மதிப்பதில்லை என்று கற்பூரத்துக்கு வருத்தம். ராசரத்தினம் அவனை சமாதானப்படுத்துகிறான்.
ராசரத்தினம் - "முள்ளை எடுக்கிறப்பல்லாம் உன்னைப் பத்திதான் பெருமையா பேசினா. அவரு இன்னும் நல்லா எடுப்பாரு, என்ன ஊரு வேலையாவே அலையிறாரு. என்ன கவனிக்க மாட்டேங்கிறார்னு புகார். ஏதாவது வாங்கிக் கொடு. டெண்ட் கொட்டாய் கூட்டிப் போய் காளை படம் காமி. இந்தா, இந்த ஜெண்டை கொடுத்திட்டு பிஸ் கிஸ் அடி என்ன?"
 
முப்பது பக்க திரைக்கதை மூணு நிமிசமாக பறக்கிறது. கற்பூரம் திரைக்கதை படமாக வரவில்லை, ஆனால், காப்பிரைட் உரிமைகளுக்கு உட்பட்டது என சுஜாதா அதில் குறிப்பிட்டிருக்கிறார். Waking Ned Divine  என்ற ஐரிஷ் திரைப்படத்தை தழுவி எழுதப்பட்டது கற்பூரம். தகவல் புத்தகத்திலேயே உள்ளது.
 
லாட்டரில் பரிசுத் தொகை விழுந்த ஒருவன் அந்த அதிர்ச்சியிலேயே இறந்து போகிறான். அந்த பரிசுத் தொகையை வாங்க ஊரிலுள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள். இது Waking Ned Divine  திரைப்படத்தின் கதை. அதை சுஜாதா தமிழுக்கு ஏற்றபடி சில மாறுதல்களுடன் கற்பூரம் என்ற திரைக்கதையாக்கினார்.
 
சரி, இதில் எங்கு ப்ரியதர்ஷன் வருகிறார்?
 
பழைய ஹாலிவுட் கிளாஸிக் திரைப்படங்களிலிருந்து உயிர்பெற்றவை ப்ரியதர்ஷனின் பெரும்பாலான படங்கள். சென்ற வருடம் ஜெய்சூர்யா, நெடுமுடி வேணு, நந்து, இன்னசென்ட் நடிப்பில் வெளிவந்த, அவரது, ஆமையும் முயலும் திரைப்படம் கற்பூரத்தின் நகல். ஐரிஷ் படத்தின் உரிமை வாங்கி கற்பூரம் திரைக்கதையை சுஜாதா எழுதியிருக்க வாய்ப்பில்லை. ப்ரியதர்ஷனிடமும் அப்படியொரு பழக்கம் இல்லை. கற்பூரத்தில் வரும் முள்ளெடுக்கும் காட்சி ஆமையும் முயலும் படத்தில் கிடையாது. பரிசுத் தொகை யாருக்கு விழுந்தது என்பதை அறிய நடத்தப்படும் பிரியாணி விருந்து இரண்டிலும் உண்டு. சதா தும்மிக் கொண்டிருக்கும் லாட்டரி நிர்வாகத்தின் ஊழியன் இரண்டிலும் வருகிறான். 
 
ப்ரியதர்ஷன் கற்பூரத்தை அடித்தாரா இல்லை ஐரிஷ் மொழியிலிருந்து நேரடியாக தழுவினாரா? 
 
எப்படியிருப்பினும், ஆமையும் முயலும் படத்தில் முள்ளெடுக்கும் காட்சி இல்லாதது குறைதான்.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!