Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2016 தமிழ் சினிமாவில் ரீமேக்குகள்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (12:26 IST)
தமிழ் சினிமாவில் ரீமேக்குகளுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. அமிதாப்பச்சன் நடித்த இந்திப் படங்களின் தமிழ் ரீமேக்குகள்  ரஜினியை சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்த அவரது ஆரம்பகாலத்தில் உதவின. விஜய்யின் இன்றைய ஆக்ஷன் ஹீரோ  அவதாரத்துக்கு தூணாக இருக்கும் கில்லி, போக்கிரி படங்கள் தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டவை.

 
கடந்த வருடங்களில் மலையாளத்திலிருந்து அதிக திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. அவற்றில்  பெரும்பாலானவை தோல்வியையே தழுவுகின்றன. இந்த வருடம் மலையாளம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்ச் மற்றும் கொரிய  மொழிகளிலிருந்து தமிழில் படங்கள் ரீமேக் செய்யப்பட்டன.
 
2016 -இல் 3 மலையாளத் திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன.
 
பெங்களூர் நாட்கள்
 
அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் பாசில், நஸ்ரியா நடித்த பெங்களூர் டேய்ஸ் திரைப்படம்,  பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்களில்  ஒன்றாக இருக்கும் பெங்களூர் டேய்ஸின் தமிழ் ரீமேக் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தது.
 
ஆறாது சினம்
 
த்ரிஷ்யம் படத்திற்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர், மெமரிஸ்.  அட்டகாசமான த்ரில்லர் படமான இதனை அறிவழகன் அருள்நிதி நடிப்பில் ஆறாது சினம் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.  மலையாளத்தில் இருந்த திரைக்கதையின் கட்டுக்கோப்பு தமிழில் இல்லை. படம் தோல்வி.
 
மீண்டும் ஒரு காதல் கதை
 
வினீத் சீனிவாசனின் இயக்கத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான தட்டத்தின் மறையத்து  படத்தை மீண்டும் ஒரு காதல் கதை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். மலையாளப் படத்தில் வரும் நாயகனின்  கம்யூனிஸ்ட் பின்னணி தமிழில் சாத்தியமில்லை. மலையாளப் படங்களில் முஸ்லீம் சமூகங்கள் தொடர்ச்சியாக  காட்டப்படுவதால் நாயகியின் முஸ்லீம் பின்னணி மலையாளத்தில் இயல்பாக இருந்தது. தமிழில் அதுவும் ஒட்டவில்லை. படம்  ப்ளாப்.
 
இந்தியிலிருந்து இந்த வருடம் இரண்டு படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன.
 
மனிதன்
 
இந்தியில் வெளியான ஜாலி எல்எல்பி படத்தை மனிதன் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். காமெடிப் படங்களில் நடித்துக்  கொண்டிருந்த உதயநிதிக்கு மனிதன் சீரியஸ் முகம் தந்தது. அந்தவகையில் மனிதனை மலையாள ரீமேக்குகளைவிட மேல்  என்று சொல்லலாம்.
 
அம்மா கணக்கு
 
அஸ்வினி திவாரி இந்தியில் இயக்கிய நில் பட்டே சன்னட்டா படத்தை அவரே தமிழில் இயக்கினார். தயாரிப்பு தனுஷ். படம்  பரவாயில்லை என்று விமர்சனம் கிடைத்த போதிலும் கமர்ஷியலாக தோல்வியையே தழுவியது.
 
இந்த ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட முக்கியமான படம் சாஹசம்.
 
சாஹசம்
 
பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்த படம் என்பதால் பிரமாண்டமாக படம் தயாரானது. தெலுங்கில் த்ரிவிக்ரம்  இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி படத்தின் ரீமேக்கான இது தமிழில் வந்த சுவடே இல்லாமல் பெட்டிக்கு  திரும்பியது.
 
இந்த வருடம் கொரிய திரைப்படம் ஒன்றும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
 
காதலும் கடந்து போகும்
 
கொரிய படமான மை டியர் டெஸ்பரடோ முறைப்படி நலன் குமாரசாமியால் ரீமேக் உரிமை வாங்கப்பட்டு காதலும் கடந்து  போகும் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அழுத்தமான கதையில்லாத இந்தப் படத்தை நலன் சிரத்தையுடன்  எடுத்திருந்தார். விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியான் இருவரின் நடிப்பு படத்தின் ப்ளஸ்சாக அமைந்தது. படம் சுமாராக  வசூலிக்கவும் செய்தது.
 
பிரெஞ்ச் திரைப்படம் ஒன்றும் இந்த வருடம் தமிழுக்கு வந்தது.
 
தோழா
 
பிரெஞ்ச் திரைப்படமான அன்டச்சபிள்ஸ் படத்தின் உரிமை முறைப்படி வாங்கப்பட்டு, தமிழில் தோழா என்ற பெயரிலும்,  தெலுங்கில் ஊப்பிரி என்ற பெயரிலும் ஒரேநேரத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டு படங்களையும் இயக்கியது வம்சி. கார்த்தி,  நாகார்ஜுன், தமன்னா நடித்த இந்தப் படம் இரு மொழிகளிலும் ஓடி லாபம் சம்பாதித்தது.
 
2016 -ஐ பொறுத்தவரை வெளிநாட்டுப் படங்களில் தமிழ் ரீமேக்குகள் இரண்டு மட்டுமே வெற்றிகரமாக ஓடின. 2017 -இல் இந்த  நிலைமை மாறுமா... பார்ப்போம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments