அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவை தரும்.
அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்' எனப்போற்றுவர்.
அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது.இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.