Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் முருக பெருமான் கோவிலின் சிறப்புகள்...!!

Webdunia
மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக  மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை - மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும்,  நீல மலர்கள் - நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள் - சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு-வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப் படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன.  மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.
 
மூலவருக்கான நைவேத் தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை,  தேன்குழல், அதிர சம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை  நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
 
மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி - தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில்  உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
 
ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடை பெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று  திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு  வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
 
முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம்,  அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம்.  தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள்,  மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments