இந்த வார புனிதப் பயணத்தில் குஜராத்தில் உள்ள ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் கோயிலைக் காணலாம்.
webdunia photo
WD
இந்த ஸ்தம்பேஷ்வர் கோயிலில் உள்ள சிவனை இயற்கையே பூஜிக்கிறது. ஆம் இது உண்மைதான். கோயிலுக்கு அருகே உள்ள கடலில் உயர்ந்த அலை அடிக்கும்போது கடல் நீர் முழு சிவலிங்கத்தையும் மூழ்கடித்துவிடுகிறது. இது கடல் சிவனுக்கு அபிஷேகம் செய்வதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இயற்கையின் அதிசயம் ஒரு நாளைக்கு இரண்டு முறை நடக்கிறது.
ஸ்தம்பேஷ்வர் திருக்கோயில் குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள கவி கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த இயற்கை அதிசயத்தைக் காணும் எவரும், பக்தியில் திளைத்துத்தான் போவார்கள். இந்த கோயிலில் சிவபெருமான் வாழ்வதாகவே மக்கள் கருதுகின்றனர்.
இயற்கையின் அபிஷேக நிகழ்ச்சி நடைபெறும் நேரம் பற்றி தெரிந்திருக்கும் பக்தர்கள் சரியாக அந்த சமயத்தில் வந்து இந்த அதிசயத்தைக் காண்கின்றனர்.
webdunia photo
WD
சிவனின் பிள்ளையான கார்த்திகேயனை தேவப் படைகளுக்கு தளபதியாக 6 நாட்களுக்கு நியமித்தார் சிவபெருமான். அந்த சமயம் அரக்கனான தரகாசுரன் தேவர்களையும், துறவிகளையும் துன்புறுத்தினான். அப்போது கார்த்திகேயன் தரகாசுரனை வதம் செய்து அனைவரையும் காப்பாற்றினான்.
தரகாசுரன் சிவனின் அதீத பக்தன். இந்த விஷயம் கார்த்திகேயனுக்கு தெரிந்ததும் மிகுந்த கவலையுற்றான். இதனை அறிந்த விஷ்ணு கார்த்திகேயனுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். அதாவது, தரகாசுரன் கொல்லப்பட்ட இடத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று. அதன்படியே கார்த்திகேயனும் அங்கு கோயிலை எழுப்பினான்.
அந்த கோயிலின் தூணில் இருந்துதான் சிவன் தோன்றியதாகவும், அதன்பிறகு அந்த கோயிலுக்கு ஸ்தம்பேஷ்வர் என பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஸ்தம்பேஷ்வர் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல சிவராத்திரி விழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பெளர்ணமி தினத்தன்றும், அமாவாசையில் இருந்து 11ஆவது நாளன்றும் பக்தர்கள் இந்த கோயிலில் இரவு முழுவதும் பூஜை செய்து சிவனை வழிபடுகின்றனர்.
webdunia photo
WD
வெகு தொலைவில் இருந்து எல்லாம் மக்கள் இக்கோயிலுக்கு வந்து இயற்கையே அபிஷேகம் செய்யும் அந்த அரியக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றனர்.