webdunia photoWD மஹாகாளீஸ்வரரின் நகரமாக பிரசித்தி பெற்ற உஜ்ஜைனை கோயில்களின் நகரம் என்றும் கூறுவர். அந்நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது ஒரு கோயில் இருக்கும். ஆயினும் அங்குள்ள நாகசந்த்ரேஸ்வரர் கோயில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மஹாகாளீஸ்வரர் கோயிலின் மீது அமைந்துள்ள நாகசந்த்ரேஸ்வரர் கோயில் வருடத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். அது நாகபஞ்சமி தினம்.நாகபஞ்சமி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து பாம்புகளின் அரசன் என்று கூறப்படும் தக்ஷக்கை வணங்குகின்றனர். நாகராஜ் தக்ஷக்கை வணங்க எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருகிறார்கள். நாக பஞ்சமி அன்று மட்டும் ஒன்று முதல் இரண்டு லட்சம் பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர். webdunia photoWD இத்திருக்கோயிலில் சிவபெருமான் கணேசருடனும், பார்வதி தேவியுடனும் உள்ள சிறப்பு மிக்க காட்சியை காணலாம்.பாம்புகளால் ஆன பீடத்தில் சிவபெருமானின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த ஒரு கோயிலில் மட்டும்தான் சிவபெருமான் பாம்புகளைக் கொண்ட பீடத்தில் இருப்பதைக் காணலாம். பொதுவாக, இந்த தோற்றத்தில் விஷ்ணுவைத்தான் காண முடியும். சிவன் கழுத்திலும் கைகளிலும் பாம்புகளை அணிந்திருப்பார்.பாம்புகளின் அரசனான தக்ஷக் கடும் தவம் புரிந்ததாகவும், அத்தவத்தை ஏற்ற சிவபெருமான் அதற்கு மரணமற்ற அமரத்துவத்தை அருளியதாகவும் கூறப்படுகிறது. வரமளித்த அந்நாள் முதல் சிவபெருமானின் உடலோடு தக்ஷக் வாழ்ந்து வருகிறது. webdunia photoWD இத்திருக்கோயில் மிகப் பழமையானதாகும். பார்மர் வம்சத்தைச் சேர்ந்த போஜ ராஜன் 1050ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை சீரமைத்ததாக கூறப்படுகிறது. 1732ல் ரானாஜி சிந்தியா மஹாகாளீஸ்வரர் கோயிலை சீரமைத்தபோது இக்கோயிலையும் சீர் செய்ததாக கூறப்படுகிறது.இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் அந்த நபரை பிடித்துள்ள அனைத்து சர்ப தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் நாக பஞ்சமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர். அந்நாளில் சிவபெருமானை தரிசிப்பதன் மூலம் நாக அரசன் தக்ஷத்தை வணங்கி சர்ப தோஷத்தில் இருந்து விடுபடுகின்றனர்.இக்கோயிலுக்கு நாக பஞ்சமி தினத்தன்று மட்டுமே செல்ல முடியும். ஏனெனில் அன்று மட்டும்தான் கோயில் நடை திறக்கப்படும். எனவே உஜ்ஜைனுக்கு வருபவர்கள் நாக பஞ்சமி தின விழா வரும் நேரத்தில் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.எப்படிச் செல்வது?சாலை மார்கமாக : இந்தூரில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ. தூரத்திலும், கண்ட்வாவில் இருந்து 125 கி.மீ. தூரத்திலும் உஜ்ஜைன் நகர் உள்ளது. பேருந்துகள், வாடகைக் கார்கள் மூலம் உஜ்ஜைன் செல்லலாம்.ரயில் மார்க்கம் : மும்பை, டெல்லி, போபால், கண்ட்வா, இந்தூர் மார்கமாக செல்லும் ரயில்கள் உஜ்ஜைன் வருகின்றன. webdunia photoWD விமானம் மூலம் : இந்தூரின் தேவி அகல்யா விமான தளத்தில் இருந்து 65 கி.மீ. தூரம்.எங்கு தங்கலாம்?உஜ்ஜைனில் உள்ள தர்மசாலா தவிர பல விடுதிகள் உள்ளன. மஹாகாளீஸ்வரர் மற்றும் அர்ஷதி ஆகிய அமைப்புகள் பல விடுதிகளை சாதாரண கட்டணத்திற்கு நடத்தி வருகின்றன.