webdunia photoWD சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று திரியாம்பகேஸ்வரர் ஜோதிர் லிங்கமாகும். மகாராஷ்ட்ர மாநில நாசிக்கில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் திரியாம்பக் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை நெருங்கும் போதே உங்களுள் ஆன்மீக உணர்வு பெருகுவதைக் காணலாம். மகா மிருத்யுஞ்சை மந்திரம் ஓதப்படுவதால் அச்சூழல் தூய்மையானதாகவும், பக்தி நிறைந்ததாகவும் இருப்பதைக் காணலாம். கிராமத்திற்குள் நுழைந்து சற்று தூரம் நடந்ததும் கோயிலின் பெரும் வாயில் நம்மை வரவேற்கிறது. இந்திய ஆரிய பண்பாட்டின் அழகிய உதாரணமாக இத்திருக்கோயிலின் கட்டடக் கலை உள்ளது. கோயிலின் கருவறைக்குள் சென்றால் சிவ லிங்கத்தின் அடிப்பகுதி மட்டுமே உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நெருங்கிச் சென்று பார்த்தால் லிங்கத்தின் பீடத்தில் ஒரு அங்குல அளவிற்கு 3 சிறிய சிவ லிங்கங்களைப் பார்க்கலாம். இவை மூன்றும் சிவன், பிரம்மன், விஷ்னுவை குறிக்கின்றன. webdunia photoWD காலை பிரார்த்தனை முடிந்ததும் சிவபெருமான் வெள்ளியால் ஆன பஞ்சமுக கிரீடத்தை அணிந்திருப்பார். இத்திருக்கோயில் மிகப் பழமையானது. அதனை 18வது நூற்றாண்டில் பேஷ்வா அரசர் நானா சாஹேப் பேஷ்வா என்பவர் 1755ல் இருந்து 1786 வரையிலான 32 ஆண்டு காலத்திற்குள் மறுசீரமைப்பு செய்துள்ளார். அதற்காக 16 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அந்நாளில் அது மிகப்பெரும் தொகையாகும். webdunia photoWD திரியாம்பகேஸ்வரர் கோயில் அமைந்துள்ள இந்த கிராமம், பிரம்மகிரி குன்றில் அடிவாரத்தில் உள்ளது. இந்தக் குன்று சிவபெருமானின் அவதாரமாகவே கருதப்படுகிறது. இந்த பிரம்மகிரி குன்றில் இருந்துதான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது. புராண காலத்தில் திரியம்பக் எனும் புனித குகையில்தான் கெளதம ரிஷி இருந்தார். ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொள்ள கெளதக ரிஷி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தது மட்டுமின்றி, தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள அவ்விடத்தில் கங்கை ஒன்று பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுவே தக்சின கங்கா என்ற கோதாவரி நதியின் பிறப்பிற்கு காரணமானது. கெளதம ரிஷியின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், முக்கண் உடையோனாய் இத்திருத்தலத்தில் திரியாம்பகேஸ்வரர் என்ற பெயரில் அருள் பாளித்தார். உஜ்ஜைன், ஓம்காரேஸ்வரர் போல, திரியாம்பகேஸ்வரரே இந்த கிராமத்தின் அரசராவார். ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் தனது நகரத்தைக் காண திரியாம்பகேஸ்வரர் வருகிறார். அவருடைய நகர்வலம் பெரும் ஊர்வலமாக நடைபெறும். தங்கத்தால் ஆன பஞ்ச முகத்துடன் நகர் வலம் வரும் திரியாம்பகேஸ்வரர் உஷாவர்த் எனும் புனித கரையில் நீராடுகிறார். webdunia photoWD சிவராத்திரி பண்டிகையின் போதும், ஷ்ராவண் மாதத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரியாம்பகேஸ்வரர் கோயிலிற்கு வருகின்றனர். அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு சிவபெருமானை வணங்குகின்றனர். கால சர்ப தோஷத்தை விளக்கும் நாராயண் நாகபலிக்கு இத்திருக்கோயிலில் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது.