மத்தியப் பிரதேச மாநிலத்தில், நர்மதை ஆற்றங்கரையில் ஓம்காரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது!
நர்மதை ஆற்றில் ஒரு கரையில் ஓம்காரேஸ்வரர் கோயிலும், மறு கரையில் மாமலேஸ்வர் கோயிலும் உள்ள இத்திருத்தலத்தின் பெருமையை புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
ஓம்காரேஸ்வரர் கோயிலிற்குள் செல்வதற்கு இரண்டு அறைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஓம்காரேஸ்வரர் ஜோதிர் லிங்கமாக வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் லிங்கத்தைத் தாங்கிய பீடம் தரையில் இல்லாமல் இயற்கையாகவே சற்று மேலாக அமையப் பெற்றுள்ளது. லிங்கத்தை எப்பொழுதும் நீர் சூழ்ந்துள்ளது. கோயிலின் விமானத்திற்குக் கீழே இந்த ஜோதிர் லிங்கம் அமைந்திருக்கவில்லை என்பது இங்கு சிறப்பிற்குரியதாகும்.
சிவபெருமானின் திருச்சிலை இக்கோயிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை பூர்ணிமா தினத்தில் இங்கு பெரும் விழா கொண்டாடப்படுகிறது. மால்வா என்றழைக்கப்படும் நர்மதை ஆற்றங்கரையில் இந்த ஜோதிர் லிங்கம் அமைந்துள்ளது.
webdunia photo
WD
கடவுள்களின் கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானின் ஓம்காரேஸ்வரர் லிங்கம், மான்தாட்டா மலையில் அமைந்துள்ளது.
ஓம்காரேஸ்வரர், மாமலேஸ்வரர் பெருமைகளை சிவபுராணம் ஆழமாக எடுத்துக் கூறுகிறது. சூரியவம்சத்தைச் சேர்ந்த மான்தாட்டாவின் புதல்வர்களான அம்பரீஷ், முகுந்த் ஆகிய இருவரும் சிவபெருமனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவருக்காக பெரும் தியாகங்களையும் செய்தனர். அதனால்தான் இப்பகுதியில் உள்ள மலைக்கு மான்தாட்டா என்று பெயர் வந்தது.