Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருக்கடவூர்த் தலம்:அமிர்தகடேசர்-அபிராமவல்லி

திருக்கடவூர்த் தலம்:அமிர்தகடேசர்-அபிராமவல்லி
, புதன், 21 மார்ச் 2012 (17:09 IST)
FILE
திருக்கடவூர் எனும் தலம் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது; அட்ட வீரட்டங்களில் முதலாவது; தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட 27 திருக்கோயில்களுள் சிறப்புமிக்க ஒன்று; மார்ர்கண்டேய முனிவரைக் காக்கும் பொருட்டுக் காலசம்காரம் நிகழ்ந்த தலம். இறைவனது திருநாமம் அமிர்தகடேசர். இறைவியின் திருநாமம் அபிராமவல்லி.

தலச்சிறப்பு :

பிரம்மன் ஞானோபதேசம் பெற விரும்பி, சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். தவத்திற்கு இரங்கிய இறைவன் தன் ஞானத்தினையே வில்வ விதையாக்கி, அவ்வில்வ விதையினைப் பிரம்மனிடம் கொடுத்து, "இவ்விதை எத்தலத்தில் ஒரு முகூர்த்த காலத்தில் (ஒன்றரை மணி நேரம்) முளைக்கின்றதோ அத்தலமே உனக்கு ஞானோபதேசம் கிடைக்குமிடம்" என்று அருள, பிரம்மனும் அவ்வாறே பல இடங்களில் இட்டுப் பார்த்து அது முளைக்கவில்லை. இத்தலத்தில் இட்டதும் குறித்த காலத்தில் முளைத்தது பிரம்மனும் இறைவனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்றான். இதனால் வில்ப வனம் என்று பெயர் பெற்று வில்வ மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றது. பிரம்மன் பூசித்த சிவலிங்கம் வில்வவனேச்வரர் என்ற பெயரோடு மேற்கு நோக்கிய சந்நிதியாக சுவாமி கோயில் வடக்குப் பிரகாரத்தில் பிட்சாடன மூர்த்தி சபைக்குக் கீழ்பால் அமைந்துள்ளது. மார்க்கண்டேயர் வரவழைத்த கங்கையில் சாதிமுல்லைக் கொடியும் வந்தமையால் அதுவும் இங்குத் தல விருட்சமாகத் திகழ்கின்றது. தலத்திற்குப் பிஞ்சிலவனம் (பிஞ்சிலம் - சாதி முல்லை) எனும் பெயரும் உண்டு.

திருக்கடவூர், பெயர்க் காரணம் :

அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் பெற வேண்டிப் பாற்கடலைக் கடைந்தனர். அமிர்தம் என்றென்றும் இளமையையும் இறவாத் தன்மையையும் தரவல்ல தெய்வீகத் திரவியம். இத்திரவியத்தைப் பெற மந்தர மலையை மத்தாகவும், வாசுகி எனும் சர்ப்பத்தைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். கடையக் கடைய வாசுகிப் பாம்பின் விஷமூச்சு கறுத்த ஆலகாலம் என்ற கொடிய நஞ்சாக வெளிவந்து சூழ்ந்துகொண்டது. கொடிய விஷமானதால், அனைவரும் கலங்கி நின்றனர். உலகனைத்தையும் காக்கும் பொருட்டுச் சிவபெருமான் அதைத் தாமே உண்டார்.

இறைவன் விடத்தை உட்கொண்டால் அவனுள் இருக்கும் அத்தனை கோடி ஜீவராசிகளும் அழிந்துவிடும் என்று இறைவி அந்த விடத்தைக் கண்டத்திலேயே தங்கச் செய்தான். இறைவன் நீலகண்டர், காளகண்டர் என்று பெயர் பெற்றார். பின்பு பாற்கடலைக் கடைய ஐராவதம் என்ற வெள்ளை யானை, உச்சைச்ரவம் என்ற குதிரை, கற்பக விருட்சம், காமதேனு, ஆறு கோடி அப்ஸரஸ் பெண்டிர் தோன்ற அவற்றை இந்திரன் ஏற்றுக்கொண்டார். மகாலட்சுமி தோன்ற ஸ்ரீமந் நாராயணன் அவளை வரித்து ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஆனார். கௌஸ்துபத்தையும் அவரே ஏற்றார். பின்பு தோன்றியது அமிர்தம். அவ்வமிர்தத்தைத் தேவர்களும் அசுரர்களும் பகையின்றிப் பகிர்ந்துண்ண விரும்பி, அதற்கான தகுந்த இடத்தைப் பிரம்மனிடம் கேட்க, பிரம்மாவும், "புலியும் மானும் பகைமை நீங்கி ஒரே தீர்த்தக் கரையில் நீர் குடிக்கும் தலமொன்று உண்டு. அங்கு அமிர்தத்தை உண்டால் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் உள்ள பகைமை நீங்கும். அத்தகைய இடம் வில்வ வனம்" என்று கூறினார். அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் அடங்கிய கடத்தை வில்வ வனத்தில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வரச் சென்றபோது அமிர்தம் கொண்ட கடம் சிவலிங்க உருவெடுத்ததால் அமிர்தகடேசர் என்று பெயர் வந்தமைந்தது. அதனால் தலம் திருக்கடவூர் என வழங்கப்பெற்றது.

அனுட்டானம் முடித்துத் திரும்பி அசுரர்களும் தேவர்களும் மீண்டும் அமிர்தம் வேண்டுமெனப் பிரார்த்திக்க, பிரம்மன் இறைவனுடன் இறைவியையும் சேர்த்துப் பிரார்த்திக்கக் கூற, பிரார்த்தனைக்காக விஸ்வகர்மா அழகே உருவான அம்பாளைச் சிருஷ்டி செய்தார். அவ்வம்பாளே "அபிராமீசுவரி". அம்மையப்பருக்கு உரிய பிரார்த்தனைக்குப் பின்பு அமிர்தத்தை அம்ருத புஷ்கரணி தீர்த்தத்தின் நடுவில் வைக்க, மீண்டும் அமிர்தம் மறைந்துவிட்டது. இம்முறை அதனை எடுத்து மறைத்தது சிவபெருமானின் மகனான மகாகணபதி; விக்னேசுவரரை துதித்து காரியங்களைத் தொடங்கினால்தான் வெற்றி உண்டாகுமெனக் கூற தேவர்களும் அவரை வணங்கினர்; அமிர்தம் பெற்று இறைவனின் அருளையும் பெற்றனர். அமிருதத்தை விளையாட்டாக மறைத்த காரணத்தால் சோர விக்னேச்வரர் என்றும் தமிழில் கள்ள வாரணர் என்றும் அழைக்கப் பெறுகின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil