Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!

ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!

Webdunia

, வியாழன், 20 டிசம்பர் 2007 (20:40 IST)
ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகததிருநாள்‌!

இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. ஒன்று ஈகைத் திருநாள், மற்றது தியாகத் திருநாள். தியாகத் திருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் யாவரும் இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களின் புனித வாழ்வை கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.

ஆம், நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்த்து நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாமும் இப்றாஹீம் (அலை)அவர்களின் உன்னத தியாகத்தை சற்று நினைவு கூர்வோமா..

நபி ஆதம் அலைஹிவஸல்லம் முதல் முகம்மது நபி அவர்கள் வரைக்கும் மக்கள் நிலைமை சீர் குலைந்து சின்னாபின்னமாகும் போதெல்லாம் இறைவன் மக்கள் குலத்திலிருந்தே ஒரு நேர்மையாளரை தேர்ந்தெடுத்துத் தனது நேர்வழியையும், அதைப் புறக்கணிப் போர்க்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்யவதையும் நபி(தூதர்) மூலமாக அவ்வப்போது போதித்து வந்துள்ளான்.

இப்படி தோன்றிய நபிமார்கள் பலரும் ஏக காலத்தில் அல்லாது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் தோன்றினார்கள். இவர்களுள் சுமார் 4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக மன்னன் நம்ரூது என்பவனது சமகாலத்தில் தோன்றிய நபி இப்றாஹீம் அவர்களுக்கு இறைவன் தனதரும் தூதுவத்தை அளித்தான்.

கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும் பயப்படாது ஏக இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்றாஹீம் அவர்கள் அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைவனே எல்லாம், அவனுக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும் குழந்தை கிடையாது. இந்நிலையில்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இருகரம் ஏந்தி தூஆ செய்தார்கள்.

ஒன்றுக்கு இரண்டு தாரம் இருந்தும் எனக்கு ஏன் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுத்தருளவில்லை. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் ஓர் உற்ற தோழரையாவது எனக்களித்தருள்புரிவாயாக என உளமுருக பிரார்த்தனை செய்தார்கள்.

இப்றாஹீம் நபியுடைய இந்த இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான் அல்லாஹ். இப்றாஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு இறையருளால் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள். மட்டில்லா மகிழ்வு கொண்டார்கள் இப்றாஹீம் (அலை) அவர்கள். இறைவன் மீது அவரது பற்றுருதி மென்மேலும் பெருகியது.
இறைவன் இப்றாஹீம் நபி(அலை) அவர்களை ஒவ்வொரு முறை சோதித்தபோதும் இறை நிந்தனை செய்யாது எல்லா சோதனைகளிலும் வென்றார்கள். இறுதியாக மாபெரும் சோதனை நபி இப்றாஹீம் அவர்களுக்கு வந்தது.

ஓரிரவு இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவுக் கண்டார்கள். ஆம் தன் மகனை தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போல இப்றாஹீம் (அலை) அவர்கள் கனவு கண்டார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் அர்ப்பணித்த இப்றாஹீம் நபி(அலை) அவர்கள் தாம் கண்ட கனவை செல்ல மகனிடம் அறிவித்தார்கள். இஸ்மாயில் அவர்களும் தம் தந்தையிடத்தில் இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி பணித்தார்.

தன்னைப் பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ எனக்கருதிய இஸ்மாயில் நபியவர்கள் தந்தையின் கண்களைக் கட்டினார். கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார். ஆனால் இறைவன் அந்த நரபலியைத் தடுத்து அவர்களின் தியாகத்தை மெச்சி, இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஆட்டை பலியிட்டு அவர்களையும் மற்றவர்களையும் புசிக்குமாறு கூறுகின்றான்.

பல பிள்ளைகளைப் பெற்றவனே தன் ஒரு பிள்ளையை இழக்க சஞ்சலப்படும்போது, ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்றாஹீம் அவர்களின் தியாகத்தை என்னவென்பது?

இப்புனிதப் பெருநாளில் நாமும் இப்றாஹீம் நபியவர்களின் தியாகத்தை மனதில் நிறுத்தி, புத்தாடை பூண்டு, அதில் நறுமணம் தடவி, பள்ளி சென்று இறைவனை இதயம் கனிந்து தொழுது உற்ற நண்பர்களுடன் உறவாடி உற்றார் உறவினர்களுடன் உளப்பூரிப்போடு நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் ஏழைகளைப் போற்றி இறைபணிந்து வாழ்வோம்.

குர்பானி முறைகள்

உங்களில் எவரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து குர்பானி கொடுத்து முடிக்கும் வரை தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம் முஸலமா(ரழி)
நூல்: முஸ்லிம் நஸவீ.

ஒற்றைக்கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்-அஹ்மத், நஸயீ.

வசதியிருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

நூல்-இப்னு மாஜா.

உண்ணுங்கள், உறவினர், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்-அபுஸயீத்,
நூல்-முஸ்லிம், திர்மிதீ.


மற்ற நாட்களில் செய்யும் நல்லறத்தை விட (துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புக்குரியதாகும். அல்லாஹ்விடம் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் இருக்கின்றன என நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்- இப்னு அப்பாஸ்(ரழி).

இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.

அல்குர்ஆன் 2:197.

அரபா தினத்தன்று நோன்பு நோற்பது முந்தைய மட்டும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என்று நபி(ஸல்)கூறினார்.

நூல்-முஸ்லிம்

Share this Story:

Follow Webdunia tamil