Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

Webdunia

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது.

இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

மாவிளக்கேற்றுதல

வைணவ சம்புரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. "எங்கள் குலவழக்கப்படி முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அந்த அரிசியை மறுநாள் ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து, மலை போன்ற அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி செய்து "கோவிந்தா" என்ற நாமம் முழங்க மாவிளக்கேற்றுவோம்" என்கிறார் சென்னை தி.நகரில் வசிக்கும் திருமதி பூமா.

நிவேதனம

பின் விளக்கு மலையேறும் நேரம் சீரான்னம் (கேசரி) வடை முதலியன நிவேதனம் செய்து உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்தளிப்பது வழக்கம் என்கிறார் இவர். அன்று இரவு விரதமிருப்பவர்கள் உணவருந்துவதில்லை. பால், பழம் போன்றவையும், காலை பெருமாளுக்கு நிவேதனம் செய்த சீரான்னமும் சாப்பிடுவதில் தவறில்லை.

அகண்ட தீபம

இன்னும் சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

Share this Story:

Follow Webdunia tamil