பொதுவாக எல்லா கோயில்களிலும் கடவுளுக்கு தேங்காய், பழம், இனிப்புகள் நைவேத்தியம் செய்யப்படும். ஆனால் இந்தக் கோயிலில் மதுவையும் சிகரெட்டையும் காணிக்கையாக அளிக்கின்றனர் பக்தர்கள்.
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போகும் ஜீவா மாமாவின் கோயிலில் இருக்கும் கடவுளுக்கு பக்தர்கள் மதுவை காணிக்கையாக அளிக்கின்றனர்.
குஜராத் முழுவதும் மதுக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பரோடா அருகே உள்ள மஞ்ஜல்புரில் அமைந்துள்ள இந்த ஜீவா மாமா கோயிலுக்கு பக்தர்கள் எந்த தடையும் இல்லாமல் மதுவை காணிக்கையாக அளிக்கின்றனர்.
இதற்கே ஆச்சரியப்பட்டால்... இதற்கு பின் ஒரு கதையும் இருக்கிறது. அந்த கதையைக் கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
அந்தப் பகுதியில் வசிக்கும் ஸ்ரீ பாரத் பாய் சோலங்கி என்பவர் இந்த கோயிலின் வரலாறு பற்றி நமக்குக் கூறினார ். அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த அனைவரும் வெளியூருக்குச் சென்றுவிட்டனர். யாரும் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி கிராமத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் கிராமத்திற்குள் நுழைந்தது.
அந்த சமயத்தில், இந்த கிராமத்தில் இருக்கும் தனது தங்கையைப் பார்க்க வந்த ஜீவா என்பவர், அந்த கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிப்பதைத் தடுக்க முற்பட்டார். அவருடன், பக்கத்து கிராம மக்களும் சேர்ந்து கொள்ளைக்கார கும்பலை அடித்துவிரட்டினர். ஆனால் இந்த சண்டையில் படுகாயமடைந்த ஜீவா உயிரிழந்தார்.
webdunia photo
WD
கிராமத்தையேக் காப்பாற்ற தனது இன்னுயிரை அளித்த ஜீவாவின் நினைவாக, அந்த கிராமத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டது. அந்த கோயிலுக்கு ஜீவா மாமா என்று பெயரிடப்பட்டது.
அப்பகுதியில் வாழும் கிராமத்தினர் இந்த கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஜீவா மாமாவின் சிலைக்கு மதுவும், சிகரெட்டையும் காணிக்கையாக அளிக்கின்றனர்.
உயிரிழந்த ஜீவாவிற்கு மதுவும், கறியும் மிகவும் பிடிக்கும் என்பதால்தான் இப்படி காணிக்கை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் இந்த கோயிலில் மாடுகளும் பலியிடப்பட்டு வந்தன. தற்போது மாடுகள் பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
webdunia photo
WD
ஒரு சிலர் தங்களது தியாகச் செயல்களால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். ஆனால் அதற்காக இதுபோன்ற காணிக்கைகள் சரியானதுதானா? மதுவையும், சிகரெட்டையும் காணிக்கையாக அளிப்பது சரி என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
இந்த நாகரீக காலத்திலும் இதுபோன்ற செயல்கள் வேறு எங்காவது நடக்கும் என்று நினைக்கின்றீர்களா?