ஸ்ரீ ராம பக்த அருளால் எல்லா நோய்களையும் தன்னால் தீர்க்க முடியும் என்று கூறும் குர்ஷரன் மகராஜ் பாபா என்பவரை இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்!
மத்தியப் பிரதேச மாநிலம் குண்டல்கண்ட் மாவட்டத்தில் உள்ள பண்டோகா எனும் சிறிய கிராமத்தில் குல்ஷாரன் பாபா வாழ்ந்து வருகிறார். அவர், தனது கிராமத்தில் மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கும் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றார்.
தன்னைச் சந்திக்க நோயாளிகளை ஒவ்வொருவராக அருகில் அழைத்துப் பேசுகிறார். பிறகு அவர்களிடம் இருந்து எதையும் கேட்காமல் ஒரு காகிதத்தில் அந்த நோயாளியைப் பற்றி எழுதுகிறார். நோயாளி ஒவ்வொருவரையும் பீடித்துள்ள நோயைப் பற்றி தனக்கு முன்பே தெரியும் என்று தான் எழுதியதைக் காட்டுகிறார்.
உடல் ஊனமுற்ற, நடக்க இயலாத ஒருவரிடம் பேசிய பாபா, தான் குரல் கொடுக்கும் போது எழுந்து நடக்குமாறு கூறுகிறார்.
webdunia photo
WD
பாபா குரல் கொடுத்ததும் சிலர் எழுந்து சில அடி தூரம் நடந்த பின் விழுந்து விடுகின்றனர். ஹனுமன் அருளால் அவர்களைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்று பாபா கூறுகிறார்.
ஒருவர் கையில் பூமாலையுடன் வந்து அதனை பாபாவிற்கு காண்பிக்கிறார். ராம்பாத் ரஜெளரியா என்ற அவர், தான் வாழ்க்கையில் நடப்பதற்குக் காரணம் பாபாவின் அருள்தான் என்று கூறுகிறார்.
தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ஒரு பாதுகாப்பு கயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு கூறும் பாபா, தொடர்ந்து ஐந்து அமாவாசை தினங்களுக்கு தன்னை வந்து பார்க்குமாறு கூறுகிறார்.
பாபாவின் சிகிச்சையை ஏற்பதற்கு மருத்துவர்கள் மறுக்கின்றனர். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான ஜெயேஷ் ஷா, நோயிலிருந்து விடுபடும் ஆர்வத்தினால் சிலர் இப்படி எழுந்து நடக்கிறார்கள் என்றும், இதனால் அவர்களின் முதுகுத்தண்டு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், அதனால் வாழ்வு முழுவதும் அவர்கள் முடமாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறுகிறார்.
ஊனமில்லாத நிலையிலும் மன ரீதியாக தங்களை ஊனப்பட்டவர்களாகக் கருதக்கூடியவர்கள் இப்படிப்பட்ட சிகிச்சைகளினால் குணமடையலாம் என்று கூறிய அந்த மருத்துவர், ஆயினும் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அப்படி நடக்கும் என்று கூறுகிறார்.