மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடர்த்தியான சத்புரா வனப்பகுதியில் சில காலத்திற்கு முன்பு வாழ்ந்த சிவ பாபா என்ற துறவியின் கோவிலில் நடைபெறும் விழா அசாதாரணமானது!
வசந்த் பஞ்சமி அன்று துவங்கி அமாவாசை வரை நடைபெறும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆடுகளை பலியிடுகின்றனர்.
கண்ட்வாவில் இருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் நடைபெறும் சிவ பாபா விழாவிற்குச் சென்றோம். இந்த விழாவிற்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிய சிவ பாபாவிற்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் கழிக்கின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்த சிவ பாபா பல அதிசயிக்கத்தக்க சக்திகளைக் கொண்டிருந்ததால், அவரை சிவபெருமானின் அவதாரமாகவே இப்பகுதி மக்கள் கருதியுள்ளனர்.
இங்கு வாழும் ஜோவிநாத் என்ற துறவி, சிவ பாபா வாழ்ந்த இவ்விடம் மிகச் சக்தி வாய்ந்தது என்றும், இங்கு வந்து வழிபடும் மக்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது என்றும் கூறினார்.
தங்களுடைய வேண்டுதலை தெரிவிக்க குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இங்கு வரும் பக்தர்கள் தங்களோடு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடுகளையும் கொண்டு வருகின்றனர். அந்த ஆடுகளின் மீது சிவ பாபா கோவிலின் பூசாரி புனித நீரைத் தெளித்ததும் அவைகள் அங்குள்ள விக்ரகத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு பலியிடப்படுகின்றன.
webdunia photo
WD
பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியை பிரசாதமாக மக்களுக்கு அளிக்கின்றனர். அதனைப் புனிதமாகக் கருதி பக்தர்கள் உண்கின்றனர். ஆனால், இறைச்சியை அப்பகுதியில் இருந்து எடுத்துச் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டும் அவ்விடத்தில் ஒரு ஈயோ எறும்போ கூட இல்லாததற்குக் காரணம், சிவ பாபாவின் சக்திதான் என்று கூறுகின்றனர்.
நாங்களும் அப்பகுதியை சுற்றிச் சுற்றி வந்து பார்த்தோம். ஒரு ஈ, எறும்பு கூட எங்கள் கண்ணில் படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேலான ஆடுகள் இங்கு பலியிடப்படுகின்றன.
நமது கேள்வியெல்லாம், இப்படிப்பட்ட பலிகளின் மூலம் கடவுளை மகிழ்விக்க முடியுமா என்பதே. வெப்துனியாவின் வாசகராகிய நீங்கள் இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.