நமது நாட்டு மக்கள் ஜோதிடத்தில் வைத்துள்ள நம்பிக்கையும், பற்றுதலும் மிக ஆழமானது. திருமணமானாலும், தொழில் செய்வதானாலும் நாடு கடந்து சென்று படிப்பதேயானாலும், எதிர்வரும் காலம் அதற்கு சாதகமானதா என்பதையெல்லாம் ஜாதகத்தைப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே எதையும் செய்வார்கள்.
எப்படிப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளெல்லாம் கிடைத்தாலும் ஜாதகம் பார்ப்பது எல்லாவற்றிலும் அவர்களைப் பொறுத்த அளவில் மிக முக்கியமானது. எனவே, நமது வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்கை செலுத்தக் கூடியதாகக் கருதப்படும் கிரகங்களின் சுழற்சியும், பெயர்ச்சியும் அவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
webdunia photo
WD
நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் தங்களுடைய வாழ்க்கையின் போக்கை அடுத்த ஓராண்டு காலத்திற்கு நிர்ணயிப்பதாகக் கருதும் ஒரு கிரகப் பெயர்ச்சியை உங்கள் கருத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
கடந்த மாதம் 16ஆம் தேதி குரு பெயர்ச்சி நடந்தது. ராசி மண்டலத்தில் குரு என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குச் சென்றது. அன்று அதிகாலை 4.24 மணிக்கு நிகழ்ந்த குரு பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான மக்கள் கோயில்களுக்குச் சென்று குரு பகவானை வழிபட்டனர்.
குரு பகவானுக்கு அன்று சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. குரு பகவானுக்கு என்று தனி சன்னதிகள் உள்ள கோயில்கள் நமது தமிழ்நாட்டில் ஏராளமாக இருந்தாலும், தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்குதான் சிவபெருமானை குரு பகவான் வழிபட்டார்.
webdunia photo
WD
குரு பெயர்ச்சி அன்று இந்த கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு குரு பகவானை காத்திருந்து தரிசித்து வழிபட்டனர். இதேபோல தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் குரு பகவானுக்கு வழிபாடுகள் நடந்தது.
குரு பெயர்ச்சி இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு காரணம் என்னவென்று எமது ஜோதிடர் முனைவர் க.ப. வித்யாதரனிடம் கேட்டதற்கு, "நமது ராசி மண்டலத்தில் நான்கு கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமானது. ஒன்று சனி, மற்றொன்று குரு, பிறகு ராகு, கேது ஆகியவை. ஒருவருடைய ஜாதகத்தில் இவைகள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை போக்கு அமையும். இந்த நான்கு கிரகங்களில் குருவைத் தவிர மற்ற மூன்று கிரகங்களும் பொதுவாக பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
ஆனால், குரு சுபக் கிரகம் என்றே அழைக்கப்படுகிறது. நமது வாழ்க்கையில் திருமணம், கல்வி, தொழில், வேலையில் முன்னேற்றம் ஆகியவற்றை அளிப்பதில் குரு பகவானின் செல்வாக்கு முக்கியமானதாகும். குறிப்பாக அரசியல்வாதிகளை இவர் அதிகாரத்தில் அமர்த்தக் கூடியவர். அதனால்தான் குரு பெயர்ச்சியின் போது அரசியல்வாதிகள் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகளை செய்வார்கள்" என்று கூறினார்.
webdunia photo
WD
ஜோதிடம் என்பது தொன்றுதொட்டு நமது பாரம்பரிய ஞானமாக உள்ளது. வேத காலத்தில் இருந்து இந்தியாவின் ஆன்மீகத்தோடும், வானவியல் சாஸ்திரத்தோடும் ஜோதிடம் பின்னிப் பிணைந்துள்ளது. மில்கி வே காலக்சி என்று அழைக்கப்படும் நாம் வாழும் உலகத்தை உள்ளடக்கிய நட்சத்திரக் கூட்டத்தை ஆகாச கங்கை என்று அன்றே நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
இன்றைக்கு மிக சக்தி வாய்ந்த தொலைநோக்கி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட பல கிரகங்களையும், நட்சத்திரங்களையும் நமது முன்னோர்கள் அன்றே கண்டுபிடித்தது மட்டுமின்றி, அதன் தன்மைகளையும் கூறியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அவர்கள் கிரகங்கள், நட்சத்திரங்களின் இருப்பை மட்டும் கூறவில்லை. அவைகளின் தன்மைகளையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கூறியுள்ளார்கள்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் அவர்கள் அளித்துள்ள பெயர்களிலேயே அதன் இயற்கையும், தன்மையும் உள்ளது. அதனால்தான் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிய போக்குகளையும், முடிவுகளையும் பற்றிக் கூறுவதில் தாங்கள் ஒரு பலமான அடிப்படையைக் கொண்டுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
webdunia photo
WD
இவ்வளவு புராதானமான ஞானத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர் ஜோதிடத்தை போலி விஞ்ஞானம் என்றும், மூட நம்பிக்கை என்றும் கூட கூறியுள்ளனர். மனிதனின் வாழ்க்கையை அவனது சிந்தனையும், செயலும்தான் நிர்ணயிக்கின்றது. இப்படிப்பட்ட ஜோதிட கணிப்புகள் நம்மை நமது செயலில் நம்பிக்கை அற்றவர்களாக மாற்றி விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
" வாழ்க்கையின் போக்கில் செல்ல வேண்டும். அது எந்த சவாலை அளித்தாலும் எதிர்கொள்ள வேண்டும். சமாளிக்க வேண்டும். அதில் இருந்து அனுபவம் பெற வேண்டும். அதுதான் சிறந்தது" என்பது அவர்களின் போதனை.
அறிவியல் உலகம் தனது கண்டுபிடிப்பாலும், காரணங்களினாலும் எதைக் கூறினாலும் மானுடர்கள் அவர்கள் படித்தவரோ, அல்லாதவரோ தங்களுடைய அனுபவத்தின்படியே எதையும் ஏற்கின்றனர்.
நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? இவைகளை எல்லாம் பற்றிய உங்கள் அனுபவம் என்ன? எங்களுக்கு கூறுங்கள்.