தமிழ்.வெப்துனியா.காம ்: கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் என்று ஒன்று பார்க்கப்படுகிறது. அவர்களும் அபாரமாக கணித்து சொல்கிறார்கள். இவைகளுக்கான அடிப்படை என்ன? அவர்களால் சில விஷயங்களை எப்படி துல்லியமாகக் கூற முடிகிறது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன ்: ஜோதிடத்தைப் பார்த்தீர்களென்றால், பிறந்த தேதி, நேரம் இதையெல்லாம் வைத்து கணித்து ஜனன ஜாதகத்தை குறிக்கிறோம். இதையெல்லாம் விட சிறந்தது என்னவென்றால், சங்க காலத்தில் ஆரூடம் கூறுதல். ஏதாவது நம்பர் சொல்லுங்க, ஒரு பூ எடு என்று சொல்வது என்பதெல்லாம் ஆரூடம்தான். இதுதான் பிற்காலத்தில் பிரசன்ன மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இப்பொழுது என்ன நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை, குரு ஓரை எடுத்துக் கொண்டீர்களானால் குரு ஓரை ஒரு மணி நேரத்திற்கு இருக்கும். வியாழக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை குரு ஓரை. மதியம் 1 முதல் 2 மணி வரை குரு ஓரை. இரவு 8 முதல் 9 குரு ஓரை. இந்த நேரங்களில் குரு ஓரை சம்பந்தப்பட்ட நிகழ்வெல்லாம் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும். பணம் சம்பந்தப்பட்டது பேசுவோம். ஏனென்றால் குரு ஃபைனான்சிற்கு உரிய கிரகம். குழந்தைகளுக்கும் உரிய கிரகம். குழந்தை படிப்பு பற்றி பேசுவோம், இல்லையென்றால் அவனை விரட்டிக் கொண்டிருப்போம். இதுபோன்று பிள்ளைகளைப் பற்றி, காசு பணம் பற்றி இதுபோன்றெல்லாம் போய்க் கொண்டிருக்கும்.
இதுபோல ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ஓரை இருக்கும். அந்த ஓரைக்கென்று தனி எஃபெக்ட் உண்டு. இந்த கிளி, எலி ஜோதிடம் எல்லாம் பார்த்தீர்களென்றால், அவையாவும் பிரசன்ன மார்க்கத்தில் வரக்கூடியதுதான். இப்ப, கிளி ஒரு முருகர் சீட்டை எடுக்கிறது என்றால், அதற்கு தனி பாடல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகமே வைத்துக் கொண்டிருப்பார்கள். கிளி ஒரு அட்டையை எடுக்கும், அந்த அட்டையில் ஒரு படம் இருக்கும். அட்டைக்கு எண் இருக்கும். அந்த எண்ணிற்கு அவர்கள் பாடல் எழுதி வைத்திருப்பார்கள்.
இந்த எண்ணிற்கு, இந்த உருவம் வந்தால், அந்த உருவத்திற்கு ஏற்றப் பலன்கள் நடக்கும். உக்கிரமாக காளி, துர்க்கை அப்படியெல்லாம் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அதில் வரும். ராமர் தனியாக வருகிறார் என்றால், கணவன், மனைவி பிரிகிற மாதிரி இருக்கும் என்று சொல்வார்கள். அவரே பட்டாபிஷேகத்துடன் படம் வந்தால், ஏழெட்டு வருடமாக கஷ்டப்பட்டீர்கள், இனிமேல் உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது, பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள் என்கிற மாதிரி பலன் சொல்வார்கள்.
இதெல்லாமே கிரக நிலைகளின் இயக்கங்களே என்று சொல்லலாம். கிளி ஒரு ஜீவ ராசி, அது ஏதாவது ஒரு சீட்டை எடுக்கிறது. அதற்கு ஏதோ தோன்றி அது எடுக்கிறது. அதை வந்து சுக்ரனோ, சூரியனோ இயக்கலாம். கிரகங்களுடைய தூண்டுதலில் அது சீட்டை எடுக்கலாம். அந்த சீட்டிற்குரிய விவரம் அவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்ததாக இருக்கும். சீட்டுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் ஒரு பின்னணி, பிணைப்பு இருக்கும். அதைத்தான் அது குறிக்கிறது.
எதையெடுத்தாலும் கிரகங்கள் ஆட்சி செய்கிறது. அதை நாம்தான் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால் அண்டத்திலும், பிண்டத்திலும் எப்படி இருக்கிறது. அண்டமும், பிண்டமும் கிரகங்களுக்கு கட்டுப்படுகிறது. மனிதன் கட்டுப்படுகிறான், ஆனால் கட்டுப்பட்டும் கட்டுப்படாததைப் போல காட்டிக் கொள்கிறான். அதனால் கெட்ட சம்பவங்களையும் சந்திக்க முடிகிறது. இயற்கையினுடைய சமிஞ்சைகள், முன் அறிவிப்புகள் இதையெல்லாம் அவனால் உணர முடியாமல் போய்விடும். எனவே இந்த கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் இதெல்லாமே பிரசன்ன மார்க்கத்தில் பார்க்கப்படுவது. அதையும் கிரகங்களே ஆள்கின்றன.