இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது.
தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.
இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.
தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.
தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.
இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பசுவை வணங்காத சித்தர்களோ, சாமியார்களோ இல்லை என்று கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர்.
பசுவின் மகத்துவமும், தெய்வீகத் தன்மையும் நல்லவர்களுக்கே புரியும். உதாரணமாக ராமாயணத்தில் பரதனை விட்டு ராமனைப் பிரியும் போது, பரதன் வேதனை தாளாமல் புலம்புவார். உன்னை (ராமர்) பிரியும் அளவுக்கு என்ன பாவம் செய்தேன்; பசுவுக்கு உணவு வழங்காமல் இருந்தேனா; இல்லை கன்று பால் குடிக்கும் சமயத்தில் அதனை தாய்ப் பசுவடம் இருந்து பிரித்தேனா; பசுவை அடித்துத் துன்புறுத்தினேனா?... என்றெல்லாம் கூறி வருந்துவார்.
உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் தமிழ் மொழி பேசுகிறது என்பது வாரியாரின் அறிவுப்பூர்வமான வாதம். எனவே இறைவனால் படைக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பதும் அவரது கூற்று.
தெய்வீகத் தன்மை காரணமாகவே தேவலோகத்தில் கூட பசு (காமதேனு) வணங்கப்பட்டதாக புரணங்கள் கூறுகின்றன. எனவே பசுவை வணங்க வேண்டும்.
சிறந்த கிருமி நாசினி: கிராமப்புறங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவில் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள் ஏற்படும். அதே மாணவர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பும் போது வைத்தியர்களிடம் சென்றால், அவர்கள் பசுவின் சாணத்தை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளச் செல்வர்.
அப்படி கோமியம் கலந்த பசுவின் சாணத்தை கையில் அள்ளி சுத்தம் செய்வதன் மூலம், அது உடலின் பல்வேறு பகுதிகளிலும் கோமியம் கலந்த சாணம் படும் வாய்ப்பு ஏற்படும். பசுவின் சாணமும், கோமியமும் சிறந்த கிருமிநாசினி என்பதால் மாணவர்களின் தொற்றுகள் மறைந்து விடும்.
அதேபோல் பசுவின் சாணத்தை தலையில் சுமந்து சென்று கொட்டுவது, பசுவின் தொழுவத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை சிவனுக்கு தொண்டாற்றுவதற்கு சமமானது என இந்து மத நூல்கள் கூறுகின்றன.
சில 10 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிற்கு ஒரு பசு என்று இருந்த நிலை மாறி, தற்போது ஊருக்கு ஒரு கோசாலை (பசு மடம்) உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
தற்போதுள்ள பசு வதை தடுப்புச் சட்டம் கூட முழுமையாக அமலில் உள்ளதா எனச் சந்தேகமாக உள்ளது. எனவே பசு பாதுகாப்பு அல்லது மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் நாடு சுபிட்சமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பசுவின் சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை எந்தவித பாதிப்பும் இல்லாத நெல், அரிசி கிடைக்கும். இதனை உட்கொண்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இதர வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், ‘வெள்ளை நிறமுள்ள உணவுப் பொருட்களை தாம் ஒதுக்கிவிடுவதே தனது இளமையின் ரகசியம ் ’ என்று கூறியதில் இந்த வகை அரிசி இடம்பெறாது.
நகரத்தில் உள்ள பசுக்கள் போஸ்டர்களை தின்று விட்டு பால் கறக்கிறது. அதனைப் பருகுவதால் வேண்டுமானால் நோய் வரலாம். ஆனால் காராம் பசுவின் பால் எந்தக் கெடுதலும் செய்யாது.
பதப்படுத்தப்பட்ட பால் என்று விற்பனை செய்யப்படுவது சுத்தமான பசுவின் பால் கிடையாது. அதில் எருமைப்பால் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காராம்பசுவின் பாலை குடித்தால் எந்த நோயும் வராது.