Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : தனுசு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2013 (15:56 IST)
FILE
தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10-ம் வீட்டில் நிற்பதால் புது வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

12.6.2014 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவுக் கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.

திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.


20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது.

இந்தாண்டு முழுக்க சனி 11-ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். 13-ந் தேதி முதல் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.

மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். புகழடைவீர்கள்.

இந்த புத்தாண்டு கடந்த ஆண்டை விட பணவரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்:

கும்பகோணம்-நீடாமங்கலம் இடையிலுள்ள திருஅவளிவநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாட்சி நாதர் உடனுறை ஸ்ரீசௌந்தர நாயகி அம்மனையும் அமாவாசை திதியில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது கைக்கூடும்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments