நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். குரு உங்கள் ராசியை பார்த்ததுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அறைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பம் உங்கள் வாழ்விலே உண்டாகும். பதுங்கி பயந்திருந்த நீங்கள் இனி பளிச்சென எல்லோர் கண்ணிலும் படுவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
கடன் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் வரும். பணவரவு உண்டு. கணவன ்- மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒரே வீட்டில் இருந்தும் ஒட்டு உறவில்லாமல் வாழ்ந்த தம்பதியர்கள் இனி ஒன்று சேர்வார்கள். மழலை பாக்யம் கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும்.
26.9.2009 முதல் ஏழரைச் சனி முழுமையாக விலகுவதால் அதுமுதல் எதிலும் ஏற்றம் உண்டு. உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பல வருடங்காளாக பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். 27.10.2009 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் ஒற்றை தலை வலி, முன்கோபம், சோர்வு யாவும் நீங்கும். எல்லோரிடமும் சலிப்புடன் பேசினீர்களே! இனி அன்பாகப் பேசி அனைவரையும் ஈர்ப்பீர்கள். எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மத்திய பகுதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் சில காரியங்கள் உடனே முடிக்க முடியாமல் தாமதமாகும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல் வலி, தைராய்டு பிரச்சனை, சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வண்டி அடிக்கடி செலவு வைக்கும். மே, ஜீன், ஜீலை ஆகிய மாதங்களில் குரு 8-ம் வீட்டிற்கு சென்று மறைவதனால் சுபச் செலவுகள், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும்.
7.10.2009 முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள் நீச்சம் பெற்று அமர்வதால் நண்பர்களிடம் அளவாக பழகுவது நல்லது. வீண்பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அக்கம ்- பக்கம் வீட்டாருடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உணவு, மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பதவி உயர்வு உண்டு. இந்த புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் அடிப்படை வசதிகளை அமைத்துத் தருவதாக அமையும்.