எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லதுகெட்டது தெரிந்துசெயல்படக்கூடியவர்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒருபோது ஆசைப்படாதவர்கள். உங்களின் தன வீட்டான 2-வது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் முணுமுணுத்துக் கொண்டிருந்த நீங்கள் முன்னேற புதுவழி கிடைக்கும். மார்ச் மாத மத்தியிலிருந்து திடீர் பணவரவு உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதி சுக்ரன் இந்த வருடம் முழுக்க வலுவாக இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிபுகும்.
கணவன ்- மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். கடனில் ஒருபகுதியையாவது பைசல் செய்ய வழி பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. இனி வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாகனம் இருந்தும் பெட்ரோல் நிரப்ப முடியாத அளவிற்கு அவஸ்தைப் பட்டீர்களே! இனி அந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
வருமானம் உயரும். புது வேலை மாறுவீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சகோதர பகை நீங்கும். சொத்துப் பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்ப்பீர்கள். செப்டம்பர் இறுதிபகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி விலகுவதால் தாழ்வு மனப்பான்மை, மறதி விலகும். அக்டோபர் பிற்பகுதியிலிருந்து ராகு,கேது சாதகமாவதால் வீண் பழி, மனஉளைச்சல் நீங்கும். நோய்கள் குணமாகும்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாகன விபத்துகள் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.
அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்கள் ஏற்பட்டாலும் அனுசரித்துப் போவது நல்லது. இந்தப் புத்தாண்டு குனிந்திருந்த உங்களை நிமிர வைப்பதுடன் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.