Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேஷம்:

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:40 IST)
webdunia photoWD
ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள்.

உங்களுக்கு இதுவரை ஓரளவு நல்ல பலன்களை அளித்து வந்த ராகுவும், கேதுவும் 9.4.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலகட்டங்களில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, பங்கு வர்த்தகத்தில் லாபம் தந்து வந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். 9.4.2008 முதல் 10.6.2008 முடிய உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும், 11.6.2008 முதல் 21.4.2009 வரை சுகாதிபதியின் சாரத்திலும், 22.4.2009 முதல் 27.10.2009 முடிய உள்ள காலக் கட்டத்தில் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் சாரத்திலும் செல்வதால் இனி நல்லதே நடக்கும்.

6.12.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலங்களில் ராகுவுடன் குரு சேர்வதால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். இந்த ராகு சுயமாக தொழில் செய்யும் சக்தியை கொடுப்பார். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி வேற்று மதத்தவர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கும் அளவிற்கு பணம் வரும்.

மூத்த சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என வருந்தினீர்களே, இனி அவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள். பழைய நண்பர்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்ததே, இனி அவர்கள் வீட்டு கல்யாணக் காரியங்களை எடுத்து நடத்தும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அரசாங்கத்துடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும்.

ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான பொரு‌ட்க‌ள் வாங்குவீர்கள். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையில் இருந்த சிக்கல் நீங்கி சுமுகமாக முடியும். பல இடங்களில் விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லையே என வெறுப்புடன் இருந்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலைக் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

வியாபாரத்தில் தராதரம் அறிந்து செயல்படுவீர்கள். பழைய பாக்கிகளை நயமான பேச்சால் வசூலிப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வேலையாட்களின் ஆதரவும் பெருகும். பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து புரட்சிகரமாக முடிவு எடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கௌரவப் பட்டம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌ம்...


கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து பல அனுபவங்களையும், உறவினர்களிடையே கருத்து மோதல்களையும், முன் கோபத்தையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்கிறார். பகைவரைப் போல் பார்த்தப் பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிக மதிப்பெண் பெறுவார்கள். உயர்கல்வி மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வேற்று மாநிலம், வெளிநாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பீர்கள். எதையோ இழந்ததுபோல மன வருத்தத்துடன் வாடி வதங்கி நின்றீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். இனி கணவன் - மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும், என்றாலும் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வாகனச் செலவு, திடீர் பயணச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மின்னணு, மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும்.

15.12.2008 வரை புதனின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். 16.12.2008 முதல் 25.8.2009 வரை சனியின் சாரத்தில் செல்வதால் அக்காலக் கட்டத்தில் தர்ம கர்ம பலன்கள் நடைபெறும். 26.8.2009 முதல் 27.10.2009 முடிய உங்களின் யோகாதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் எதிர்பாராத பண வரவு, திடீர்யோகம் உண்டாகும்.

பரிகாரம்:

திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவக்ர காளியம்மனையும், ஸ்ரீதேனாம்பிகை அம்மை உடனுறை ஸ்ரீசந்திர சேகரேஸ்வரரையும் அரளிப் பூ மாலை சாற்றி வணங்குங்கள்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?