Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2008 புத்தாண்டு பலன்கள் - கடகம்!

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (18:58 IST)
கலகலப்பாகப் பேசும் நீங்கள் சில நேரங்களில் கணக்காகவும் பேசி எதிரியை கலங்கவைப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள் மற்றவர்களின் நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்கள். உங்களின் ராசிக்கு மூன்றாவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தைரியம் கூடும்.

உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சுக்கி ரன் நிற்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு கட்டும் பணி கொஞ்சம் நிறைவடையும். சூரியன் வலுவாக நிற்பதால் அரசாங்க வேலைகள் சுலபமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவரின் கோபம் குறையும். உங்கள் ராசிக்கு முன்னும்,பின்னும் செவ்வாயும், சனியும் நிற்பதால் இனந்தெரியாத மனக் கவலைகள் வந்து செல்லும். தலை சுற்றல், இடுப்பு வலி, மாதவிடாய்க் கோளாறு, நீரிழிவுத் தொந்தரவுகள் வரக்கூடும். உடல் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள்.கண்டபடி அடிக்கடி விரதங்கள் இருக்க வேண்டாம்.

01.05.2008 முதல் 23.06.2008 முடிய உங்கள் ராசிக்குள்ளேயே நீச செவ்வாயும், கேதுவும் சேர்வதால் இந்த கால கட்டத்தில் பிள்ளைகளாலும், பெற்றோர்களாலும் அலைச்சலும், மருத்துவச் செலவும் வந்து செல்லும். 24.06.08லிருந்து 11.08.08 முடிய உள்ள நேரத்தில் உங்கள் யோகாதிபதி சனியும் சேர்வதால் யாருக்காவும் எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் இந்தக் காலக்கட்டத்தில் நிதானம் தேவை. 21.01.08 முதல் 11.02.08 முடிய உள்ள காலத்தில் வாகனச் செலவு, சிறு சிறு விபத்து வந்து நீங்கும். மற்றபடி இந்த வருடத்தின் பிற்பகுதி எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்.

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பிள்ளைகளின் கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். சுப நிகழ்ச்சியை சிறப்பாக முடிப்பீர்கள். நவம்பர் மாதத்தில் தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு வரும். ஆனால் திடீர்ப் பணவரவு உண்டு. டிசம்பர் மாதத்தில் நீண்ட நாள் சிக்கல்கள் தீரும். கணவருக்கு அதிரடி முன்னேற்றம் உண்டாகும். கௌரவப் பதவிகளும் தேடி வரும். புதன் உங்கள் ராசியைப் பார்க்கும் போது இந்த வருடம் பிறப்பதால் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். எதிர்பாராதப் பண வரவு ஷேர் மூலம் உண்டு. என்றாலும் பாதச்சனி நடைபெறுவதால் பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

சகோதர, சகோதரி வகையில் ஆகஸ்ட் மாதம் முடிய மனவருத்தங்கள் வரும். வீண் பேச்சுக்களையும், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதையும் தவிர்க்கப் பாருங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யப் பாருங்கள். வெளி வட்டாரம் நன்றாக இருக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் மீது வீண் பழிகள் வந்து விழும். மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். மற்றவர்களை நம்பி கூட்டுத் தொழிலில் இறங்க வேண்டாம். அங்கு இங்கு கடன் வாங்கி முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். உணவு, துணி, ஏற்றுமதி, இறக்குமதி, தரகு மூலம் லாபம் வரும். ஏப்ரல், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மறந்தும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். வருடப் பிற்பகுதியில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்களின் பிரச்சனைகளும் தீரும். பதவி உயரும். சம்பளப்பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்கள் அவசரப்பட்டு காதலில் தவறான முடிவு எடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். அக்டோபர் மாதத்தில் நல்ல முடிவு கிடைக்கும். கல்யாணம், வேலை நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாதகமாக முடியும். மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். கணக்கு, அறிவியல் பாடத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள், பரிசு கிடைக்கும்.

பரிகாரம் :

திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் வீற்றிருக்கும் வக்ரகாளியம்மனையும், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரையும் பௌர்ணமி திதி நாளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments