Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்ப ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (12:25 IST)
webdunia photoWD
மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையுடைய நீங்கள், எப்போதும் இதயத்திலிருந்தே பேசுவீர்கள். விட்டுக்குக் கொடுக்கும் குணமுடைய நீங்கள், ஒன்றுபட்டு செயல்படுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாத்து பழமையை காதலிப்பீர்கள். என்வழி தனி வழியென எப்போதும் ஒரு சிந்தனையில் மூழ்கியிருப்பீர்கள். வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நீங்கள், நடுநிலை தவறாதவர்கள். பணத்தைவிட குணத்திறகு முக்கியத்துவம் தருவீர்கள்.

பூமிபோல பொறுமையும், சகிப்புதன்மையும் உடைய நீங்கள், காரணகாரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள்.கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழமாட்டீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் உட்கார்ந்து பந்தாடிய குரு பகவான் இப்போது அள்ளிக்கொட்டுக்கும் 11வது வீட்டில் அமர்கிறார். இழந்த கௌரவம் மரியாதையை மீட்பீர்கள். உங்களைவிட வயதில் குறைந்தவர்களிடமெல்லாம் அவமானப்பட்டீர்களே, சாட்சிக்கையெழுத்து போட்டு சங்கடத்தில் சிக்கினீர்களே, இனி மனப்போராட்டங்கள் ஓயும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் தவித்தீர்களே, எதிர்பார்த்த பணமும் தக்க சமயத்தில் கிடைக்கவில்லையே, என்ற கவலைகள் மாறும். சொன்னபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பும், வீண் வாக்குவாதமும், வந்துபோனதே, உறவினர்கள் கூட உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தினார்களே, இனி அவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வருமானத்தை பெருக்க வழி காண்பீர்கள். பிள்ளைகள் வரவர தொல்லைகளாக இருக்கிறார்களே என அவ்வப்போது வருந்தினீர்களே, இனி சொந்தம், பந்தங்கள் மெச்சும்படி நடந்துக் கொள்வார்கள்.

உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். கடன் பிரச்சனைக்கு இனி அஞ்ச வேண்டாம். பழைய கடனையெல்லாம் கொடுத்து முடிக்கும் அளவிற்கு பண வரவு உண்டு. அதிரடியானத் திட்டங்களை இனி அசுர வேகத்தில் எடுப்பீர்கள். பொறுமையாகக் காத்திருந்த காரியங்கள் கூட இனி வெற்றியில் முடியும்.

சகோதர, சகோதரிகளுக்கு எவ்வளவு செய்தும் நம்மை புரிந்துக் கொள்ளவில்லையேஎன நீங்கள் வருந்தினீர்களே, இனி உங்களின் உண்மையான அன்பை புரிந்துக் கொள்வார்கள்.மூத்த சகோதரி உதவுவார். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். சோர்வு, மன உளைச்சல் விலகி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

அறரகுறையாக நின்ற கட்டிடப் பணிகளும் முழுமையடையும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் நீங்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. உங்களின் கனவுகள் நனவாகும். மனதில் பல ஆசைகள் இருந்தும் அதனை நிறைவேற்ற முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே! இனி ஒவ்வொன்றாக நிறைவேறும். வேற்று மதத்தினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு இனி விலகும். அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். வெகுநாட்களாகப் போக நினைத்தும், தடைபட்டு வந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் எவ்வளவு போராடியும், நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்ததே! பாக்கிகளை வசூலிக்க முடியாமல் அலைந்தீர்களே! இனி அந்த நிலை மாறும். இனி அதிரடி மாற்றங்களை செய்து எதிரிகளை பின்னுக்குத் தள்ளுவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்கள் இனி உங்கள் கருத்துகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வணிகங்களால் லாபம் உண்டு. மறைமுகப் போட்டிகளைப் பந்தாடுவீர்கள்.வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் அவ்வப்போது இருந்து வந்த பிரச்சனைகளெல்லாம் இனி நீங்கும். உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தேடி வரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களால் மகிழ்ச்சியுண்டு. திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்குத் தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். காதல் இனிக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும்.

கல்யாணத்திலிருந்து வந்த தடைகள் விலகும் .மாணவ, மாணவிகளே! நினைவாற்றல் கூடும். கடினமான பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். விளையாட்டில் முதலிடம் பிடிப்பீர்கள். கலைஞர்களே! பணப்புழக்கம் அதிகரிப்பால்,ஆடம்பரமான வீட்டைக் கட்டுவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். நழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரும். சம்பளம் உயரும். பரிசு பாராட்டு கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் குடத்திலிட்ட விளக்காக இருந்த உங்களை குன்றிலிட்ட விளக்காக ஒளிரவைப்பதுடன் செல்வம்,செல்வாக்கையும், சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடத்தையும் தருவார்.

பரிகாரம்: தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரரையும், அங்கே ஞானவடிவாக விளங்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பழைய சிவாலயத்தை புதுப்பிக்க உதவுங்கள். உழவாரப் பணி செய்யுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். இன்பம் பெருகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments