Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னி ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்

- ஜோ‌திட‌ ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (12:30 IST)
webdunia photoWD
கள்ளமில்லா சிரிப்பும், கபடமில்லாத கலகலப்பான பேச்சும், எதிரில் உள்ளவர்களையும், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறனும் உள்ளவர்களே, பழமையுடன் புதுமையையும் கலந்து தனக்கென்ன தனிப்பாதையை அமைத்துக் கொள்பவர்களே, கண் கலங்கி, கையேந்தி வருபவர்களின் சுமைதாங்கி சுகமளிப்பவர்களே, கற்பனை வானில் சிறகடிப்பவர்களே, இனம், மொழி, நாடு கடந்த நட்பு வட்டம் உள்ளவர்களே...

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவ்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை முடக்கிப் போட்ட குருபகவான், 16.11.2007 முதல் 30.11.2008 முடிய நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை வழிநடத்துவார். வாடிய முகத்துடன் காணப்பட்ட நீங்கள், இனி மலர்ந்த முகத்துடன் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி தங்கும், என்றாலும் கணவன்- மனைவிக்குள் வீண் விவாதங்களும், ஈகோப் பிரச்னைகளும் அவ்வப்போது வந்துபோகும். வருவாய் ஒருபுறம் இருந்தாலும் செலவினங்களும் அடுக்கடுக்காய் வரும்.அனாவசியச் செலவுகளைக் குறைத்து விட்டு அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். பிள்ளைகளால் இருந்துவந்த வீண் அலைச்சல்கள் குறையும். உறவினர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் நன்றி மறந்து பேசுவார்கள்.அதையெல்லாம் நினைத்து நீங்கள் புழுங்கிக்கொண்டிருக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மனைவிக்கும் மருத்துவச் செலவுகள் உண்டு. பெற்றோர் சில நேரம் ஆவேசமாகப் பேசினாலும் அதிர்ச்சி அடைய வேண்டாம். ஆடை ஆபரணங்கள் சேரும்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் உதவி கிட்டும். கன்னிப் பெண்கள் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாதவிடாய்க் கோளாறு, கண் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. காதல் மோதலில் முடியும். கண்டபடி மனதைச் சிதறவிடாமல்

உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள்.குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.பிரார்த்தனைகளையும் தள்ளிப்போடாமல் நிறைவேற்றுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகள் மற்றவர்களைத் தாக்கி பேச வேண்டாம். கிடைக்கின்ற நேரங்களில் தியானம், யோகாசனம் செய்யப் பாருங்கள்.

வாகனத்தை இயக்கும் போது கவனத்தைச் சிதறவிடாதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பெரிய பொறுப்புகள் தேடி வரும் .வெளிநாட்டுப் பயணங்களும் வந்து சேரும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு கிட்டும். மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுவது நல்லது. விடைகளை எழுதிப் பாருங்கள்.

நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். விளையாட்டின் போது கவனம் தேவை. சிறு சிறு காயங்கள் ஏற்படக்கூடும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பெரிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்சனைகள் மூளும், அனுசரித்துப் போகப் பாருங்கள். வாடிக்கையாளர்களைக் கவர அதிரடிச் சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். இரும்பு, மூலிகை, உணவு, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியைப் பற்றி குறை கூறுவதைத் தவிர்த்துவிட்டு தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நழுவிச்சென்ற வாய்ப்புகள் தேடி வரும். கிசுகிசுத் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள்.

இந்த குரு மாற்றம் தன்னம்பிக்கையை தருவதாகவும்,பிரச்சனைகளை சந்தித்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தென்னார்க்காடு மாவட்டம் வடலூரில் அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை வடிவாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளலார் இராமலிங்க சுவாமி அடிகளாரை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். நிம்மதி கிட்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments