பணக்காரன், படித்தவன், பாட்டாளி என பாகு பாடுபார்க்காமல் பலரிடமும் பாசமாகப் பழகும் நீங்கள், சிறந்த பகுத்தறிவாதிகள். மனிதநேயம் அதிகமுள்ள நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்கள். சோகத்தையும், சுகத்தையும் ஒரே மாதிரியாக சுவைக்கும் நீங்கள், சிறந்த நடுநிலையாளர்கள். துவர்ப்பு கலந்த இனிப்பை விரும்பி உண்ணும் நீங்கள், பகுத்துண்டு வாழ்வீர்கள்.
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து கொண்டு அலைகழித்த குரு பகவான் சமசப்தம ராசியான ஏழாம் ராசிக்குள் தற்சமயம் அடிஎடுத்து வைக்கிறார். உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கினீர்களே, எப்போதும் எதையோ இழந்தது போல கவலைதோய்ந்த முகத்துடன் காணப்பட்டீர்களே, அங்கும் இங்கும் கடன் வாங்கி எதையும் திருப்பித்தர முடியாமல் திணறினீர்களே, இனி இந்த அவலநிலை யாவும் மாறும். அடுத்தடுத்து வேலைப்பளு அதிகரித்துக் கொண்டே இருந்து உங்களை பல வழிகளிலும் தொல்லை கொடுத்ததே, நண்பர்கள் உறவினர்களிடத்தெல்லாம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டீர்களே! குரு உங்கள் ராசியை பார்ப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிரந்தர வருமானத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக புயலென உருவெடுத்த நிலையெல்லாம் மாறி அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இனி ஒற்றுமை ஓங்கும். பழைய கடனை அடைக்க எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள்.
பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வர புது முயற்சிகளை எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். உங்கள் மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கு எதிர்பார்த்தபடி வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டும். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத்தொழில் தொடங்குவீர்கள்.
கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிந்து திருமணமும் முடியும். புது வேலையும் கிடைக்கும். வயிற்றுவலி, இடுப்பு வலி விலகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களின் கல்யாணச் சடங்குகளை முன்னின்று நடத்துவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியல் தலைவர்களால் பாராட்டப்படுவீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் உண்டு. மனதிற்குப் பிடித்த வேலைக்காக தேடி அலைந்தீர்களே, இனி எதிர்பார்த்த வகையில் நல்ல வேலை கிடைக்கும்.
வழக்கில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். தொலைதூர புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இனி அரட்டை அடிக்காமல் பாடங்களை கவனிப்பார்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள். மதிப்பெண் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். குடும்ப விடயங்களை பாதுகாப்பீர்கள்.
வியாபாரத்தில் எதைச்செய்தாலும் அது எதிர்மறையாகவே போய்விடுகிறதே என அவ்வப்போது வருந்தீர்களே, இனி உங்களின் ஒவ்வொரு முடிவும் அதிரடியாக இருக்கும். நவீன விளம்பர யுக்தியை பயன்படுத்தி போட்டியாளர்களை பின்வாங்கச் செய்வீர்கள். பங்குதாரர்களிடம் தினந்தோறும் போராட்டமாக இருந்து வந்ததும், ரகசியங்களையெல்லாம் வேலையாட்கள் வெளியில் சொல்லிக் கொண்டிருந்ததும் முடிந்த கதையாகும். இனி உங்களை அனுசரித்து போவார்கள். கம்ப்யூட்டர், மருந்து, ரசாயனம், உணவு வகைகளால் இலாபம் அதிகரிக்கும். வாடகை இடத்தில் இயங்கி வந்த கடையைச் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் நேரம் பார்க்காமல் உழைத்தும், அதற்கான பலம் இல்லையே என்று நெருக்கமானவர்களிடம் புழம்பித்தவித்தீர்களே! இனி கவலை வேண்டாம். பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் உண்டு. சக ஊழியர்களிடையே வீண் வாக்குவாதங்கள் சதா வந்துகொண்டே இருந்ததே, இனி தங்களின் தவறை உணர்ந்து நட்புறவாடுவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகளும் உண்டு.
கலைஞர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடியே பெரிய நிறுவனத்தில் வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
பரிகாரம்: புதுச்சேரியில் முத்தியால்பேட்டைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்துள்ள ஸ்ரீ குருசித்தானந்த சுவாமிகளை வணங்குங்கள். அங்குள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் தூண்டாமணி விளக்குடன் எழுந்தளியுள்ள ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தியை வணங்குங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.