Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண் ஜோதிடத்தின் அடிப்படை என்ன?

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (19:35 IST)
எண் ஜோதிடம். இப்பொழுது இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த எண் ஜோதிடத்தின் அடிப்படை என்ன? ஒவ்வொருவருடைய எண் என்பது எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒருவரின் விதி, எதிர்காலத்தை எண் ஜோதிடம் மூலம் துல்லியமாக அறிய முடியுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன ்:

WD
உலகெங்கும் பின்பற்றக் கூடிய ஜோதிடமாக இருக்ககிறது எண் ஜோதிடம். இது எளிமையானதும் கூட. அதில் குறிப்பாகப் பார்க்கும் போது சூரியனுக்கு 1, சந்திரனுக்கு 2, குருவிற்கு 3, ராகுவிற்கு 4, புதன் 5ஆம் எண், சுக்ரன் 6, கேதுவிற்கு 7, சனி பகவானுக்கு 8, செவ்வாய்க்கு 9 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த எண் ஜோதிடத்தில் விதிமுறைகள் மிக மிக எளிமையானதாக இருக்கிறது. ஜோதிடம் என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட பாடல்கள் இருக்கிறது. சித்தர்கள் பாடிய பாடல்கள், மற்றவர்கள் பாடியது என்று இருக்கிறது. ஆனால் எண் ஜோதிடத்தில் உள்ளுக்குள் மூழ்கிப் போகிற மாதிரி எதுவும் கிடையாது. பிறந்த தேதி என்று எடுத்துக்கொண்டால் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறவி எண் 1. இதேபோல 6, 15, 24 என்றால் அவர்களின் பிறவி எண் 6. பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வருவது விதி எண்.

அதை கூட்டும் போது ஆயிரத்து தொள்ளாயிரத்து என்று கூட்ட வேண்டுமா?

அப்படியே கூட்டிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 1954 என்று வைத்துக் கொள்ளுங்கள், 1+9+5+4 = 24, பிறகு மாதத்தையும் நாளையும் கூட்டி மொத்தமாக, உதாரணத்திற்கு 55 என்று வருகிறதென்றால் 5+5 = 10 = 1.

தற்பொழுது நாம் எண் ஜோதிடம் பார்க்கிறோம், ஜோதிடமும் பார்க்கிறோம். பல எண் ஜோதிடர்கள், என்னுடைய அனுபவத்தில், சென்ற உடனேயே பெயரை எழுதச் சொல்வார்கள். பெயரை எழுதியவுடன் பெயர் சரியில்லை. A- வோ B- யோ சேர்த்து பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். பிறகு உங்களுடைய ராசியான எண், ராசியான தேதிகள், ராசியான ரத்தினம், ராசியான திசை, ராசியான வயது இதெல்லாம் உங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதற்குமேல் ஆழமாக செல்வதாக நாம் பார்த்ததில்லை.

இப்பொழுது, நிறுவனங்களுக்கு பெயர் சூட்டுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல் என்று எண் ஜோதிடம் அடிப்படையில் 90 சதவீத மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல ராசியான எண்ணாகப் பார்த்து பையனுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்பது மாதிரி. ஜோதிடத்தைப் பொறுத்தவரையில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இந்தந்த எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்பது முறை. தற்பொழுது எண் ஜோதிட அடிப்படையில் கட்டங்களில் கணக்கிட்டு அந்த எழுத்தைவிட இந்த எழுத்து இருப்பது நல்லது என்று சொல்கிறோம். இதில் என்ன பெரிய குறை என்றால், பல எண் ஜோதிடர்களுக்கு ஜோதிடம் என்றால் என்னவென்றே தெரியாது!

இப்பொழுது, 1ஆம் எண் என்றால் சூரியன். 1ஆம் தேதியில் பிறந்த குழந்தைக்கு 1ஆம் எண்ணில் பெயர் வையுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் அந்த 1ஆம் எண்ணிற்குரிய சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலோ, சனி, ராகு, கேதுவுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது மறைந்திருந்தாலோ அந்த 1ஆம் எண் அவர்களுக்கு வேலை செய்யாது. அந்த அளவிற்கு அவர்கள் ஆழமாகப் பார்ப்பதில்லை. அதனால் ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு இரண்டையும் ஒப்பிட வேண்டும்.

இப்படி 1ஆம் எண்ணிலேயே பெயர் வைக்காமல், இந்த 1ஆம் எண்ணிற்குரிய சூரியன் வலுவிழந்து காணப்பட்டால், 3ஆம் எண், 9ஆம் எண்ணிற்குரிய கிரங்களையும் ராசிக் கட்டத்தில் ஆராய்ந்து ஆலோசனை வழங்கினால் பெரிய வெற்றியை அடையலாம்.

நம்மைப் பொறுத்தவரை நிறைய பேருக்கு ஜாதகத்தையும் பார்த்து, கை ரேகையையும் பார்த்து செய்துக் கொண்டிருக்கிறோம்.

துரைமுருகர் எண் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வந்து ரேகையை பார்ப்பார். ஜாதகத்தைப் பார்க்கவில்லையென்றாலும், ரேகையில் சூரிய மேடு எப்படி உள்ளது, சுக்ரன் மேடு எப்படி உள்ளது, சனி மேடு எப்படி இருக்கிறது என்று பெரிய லென்ஸ் வைத்து பார்த்துவிட்டுப் பிறகு ஆலோசனை வழங்குவார். இது ஒரு நல்ல விடயம். ஏனென்றால் ரேகையையோ அல்லது ஜாதகக் கட்டங்களையோ பரிசீலித்து அதன்பிறகு செய்தால் அது வெற்றி அடையும். இப்படியில்லாமல் மொட்டையாக பார்த்துவிட்டு கணிக்கிறது நல்லதல்ல.

தற்போது, இந்த எண் என்று குறிப்பதற்கு ஆங்கில மாதம், தேதி, வருடம் என்று கணக்கிட்டு குறிப்பிடுகிறார்கள். இப்படி தமிழ்த் தேதியில் இப்படி குறிக்க முடியாத ோ?

தமிழ் தேதி கஷ்டம். சாதாரணமாகப் பார்க்கும் போது அருதிப் பெரும்பான்மையாக பயன்பாட்டில் இருப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். நம்ம தேசத்திலேயே நம்ம மொழிகளை ஆய்வுக்கு உட்படுத்தி வைத்திருக்கிறோம். மெய் எழுத்துக்கள், உயிரெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் இதற்கெல்லாம் அந்த மாத்திரை அளவு இருக்கு இல்லையா அதன் அடிப்படையில் என்ன குறியீடு, எண் வழங்கலாம் என்று என்னோட ஆய்வில் இருந்து கொண்டிருக்கிறது.

உலகத்தார் அருதிப் பெரும்பான்மையாக ஆங்கில மொழியைப் பயன்படுத்தி வருவதாலும், அதில் எழுத்துக்கள் மிகக் குறைவாக இருப்பதாலும் இதற்கு இந்த எண் என்று குறிப்பிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்ம மொழிக்கும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

ஜோதிடத்திற்கு இருக்கக் கூடிய தொன்மை எண் ஜோதிடத்திற்கு இருக்கிறதா?

இல்லை, எதுவுமே இல்லை. மேலை நாடுகளில் கெய்ரோ போன்றவர்கள் சிலர் இதை குறைந்த சதவிகிதம் பயன்படுத்தி இருக்கார்கள். அவர்களுடைய கணிப்பு மேலோட்டமானதுதான். மூன் சைன், அதாவது நம்முடைய ஜோதிட கணிப்பு முறை சந்திரனை அடிப்படையாக வைத்தது. லூனார் சிஸ்டம். அவர்கள் வந்து சோலார். அதாவது சூரியனை அடிப்படையாக வைத்து பார்க்கக் கூடிய சன் சைன். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு ராசிதான்.

நமக்கு இரண்டேகால் நாளைக்கு சந்திரன் ஒவ்வொரு ராசிக்கும் மாறிக்கொண்டே இருக்கிறார். நாளிதழ்களில் வருவதைப் பார்த்தால் தெரியும், ஒரு மாதத்திற்கு ஒரே ராசி என்று சொல்லியிருப்பார்கள். மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 வரை அது மேஷ ராசி அந்த மாதிரியெல்லாம் வைத்திருப்பார்கள். இதுமாதிரியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஜோதிடத்திற்குரிய தொன்மையோ, பழமையோ, துல்லியமோ இதில் எதிர்பார்க்க முடியாது.

இப்பொழுது பெயரிலுள்ள எழுத்துக்களை மாற்றுவது என்று சொன்னீர்கள். உதாரணத்திற்கு, கணேசன் என்பவர் கணேசேன் என்று வைத்துக்கொள்கிறார். நந்தினீ என்றெல்லாம் வைக்கிறார்கள். இந்த மாதிரி அந்த உச்சரிப்பே கோரமாகப் போகிறது. இதனால் ஏதாவது பயன் கிடைக்குமா?

ஃபோனடிக்ஸ் இருக்கு இல்லையா, அதன்படி பார்க்கும் போது ஒலி, நாதம், சப்தம் அதற்கு தனி சக்தி உண்டு. ஆனால் இவர்கள் இரண்டு h போடுவது, இரண்டு a போடுவது என்பது லக்ன சாத்தியப்படாது. ஆனால் அந்த எண்ணிற்கு இயல்பான, உதாரணத்திற்கு 6ஆம் எண்ணில் பிறந்த அந்த 6ல் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள். 6 இல்லையென்றாலும், 5ஆம் எண் நல்ல பலன் கொடுக்கும். அதிலும் பார்க்க வேண்டும். ஜாதகத்தில் 6ஆம் எண்ணிற்குரிய சுக்ரன், 5ஆம் எண்ணிற்குரிய புதன், ரேகையில் சுக்ரன் மேடு, புதன் மேடு இவைகளையும் ஆராய வேண்டும்.

பெரும்பாலும் கூடுதல் எழுத்துக்கள் என்பது நெடில் வரும் இடத்தில் கூடுதலாக ஒரு a சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் இயல்பிற்கு மாறுபட்ட வகையில் குறிலை நெடில் ஆக்குவது, நெடிலை குறில் ஆக்குவது, குறிலை மேலும் குறிலாக்குவது இப்படியெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்யும் போது அவர்களுடைய குணாதிசயங்களும் மாறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அதை நாம் சரியாகப் பார்த்து செய்ய வேண்டும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments