அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஒபாமா தேர்வு செய்யப்படுவார் என்று நீங்கள் கணித்ததைத் போல் அவர் வெற்றி பெற்றுவிட்டார். அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா, தனது அமைச்சரவை சகாக்களை தற்போது தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து கடுமையாகப் போராடிய முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி தோல்வியுற்றார்.
இந்நிலையில், அவருக்கு அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் பதவி (தற்போது காண்டலீசா ரைஸ் வகிப்பது) வழங்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஜாதக ரீதியாக ஹிலாரிக்கு அப்பதவி கிடைக்குமா? அவர் 1947 அக்டோபர் 26ஆம் தேதி சிகாகோவில் பிறந்தவர்.
அவரது நட்சத்திரம் பூரட்டாதி. தற்போது அந்த நட்சத்திரத்திற்கு சுமாரான நிலையே காணப்படுகிறது. எனவே டிசம்பர் 6ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அப்பதவி ஹிலாரிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் பூரட்டாதி குருவின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம்.
ஆனால் டிசம்பர் 6ஆம் தேதிக்கு பின்னர் குரு நீச்சம் பெறுகிறார் என்பதால், அந்த தேதிக்கு பின்னர் ஹிலாரிக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது.