ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்டின் துவக்கத்தில் அல்லது இறுதியில் (டிசம்பர்) பிறக்கும் குழந்தைகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிட ரீதியாக இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ஒருவர் விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் சந்திரனும், புதனும் நன்றாக இருக்க வேண்டும். பல முன்னணி விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தைப் பார்த்ததில் இதில் உண்மை இருப்பதை கண்டறிந்தோம்.
ஆஸ்ட்ரேலிய பல்கலை நடத்திய ஆய்வில் டிசம்பர் இறுதி மற்றும் ஆண்டுத் துவக்கத்தில் பிறக்கும் குழந்தைகள், விளையாட்டு வீரர்களாக உருவெடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தீர்கள்.
டிசம்பர் இறுதியில் குருவின் வீடான தனுசு ராசியில் புதன் வருவார். அதேபோல் மகரம், கும்பம் (குருவின் நட்பு வீடுகள்) ஆகிய ராசிகளிலும் புதன் இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாகப் பார்த்தால் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மகரம், கும்பம், தனுசு ஆகிய ராசிகளில் புதன் சஞ்சாரம் செய்வார்.
மகரம், கும்பத்தில் புதன் சஞ்சரிக்கும் போது பிறப்பவர்களுக்கு இயற்கையிலேயே விளையாட்டுத் திறன் இருக்கும். ஜனவரி, பிப்ரவரியில் புதனின் அம்சம் மேலோங்கி இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் புதன் சேராமல் தனித்து அல்லது பிற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களால் முன்னணி விளையாட்டு வீரராக உருவெடுக்க முடியும்.
ஆவணி மாதம் (ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 17 வரை) புதன் தனது சொந்த வீடான கன்னியில் உச்சமாக இருப்பார். இந்தக் காலகட்டத்தில் புதன் சிறப்பாக இருக்கப் பிறந்தவர்கள் மாநில, தேசிய அளவில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரர்களாக உருவாக வாய்ப்புள்ளது.
புதன் உச்சம் பெற்றவருக்கு புதன் தசை நடக்கும் காலகட்டத்தில் பதக்கம் பெறுவது, பெரிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவது, அதன் மூலம் அரசு மரியாதை பெறுவது, அரசுப் பணியில் அமர்வது போன்ற வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் புதன், குரு சிறப்பாக இருந்தால் அவர் விளையாட்டு வீரர் ஆக உருவெடுப்பார் என்று பொதுப்படையாகக் கூறினேன். ஆனால் விளையாட்டின் நுணுக்கங்கங்களை ஒருவர் பெறுவதற்கு மனோகாரகன் சந்திரன் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் எந்த விளையாட்டுத் துறையில் சாதிப்பார் என்பதையும் ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும்.
உதாரணமாக சுக்கிரன் நன்றாக இருந்தால் கார் பந்தயங்களில் அவர் புகழ்பெற வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படாமல் கார் பந்தயத்தில் வெற்றி பெறவும் சுக்கிரன் உதவுகிறார். கால்பந்து விளையாட்டில் சிறப்பு பெற சனியின் ஆசி வேண்டும். குத்துச்சண்டையில் வெற்றி பெற செவ்வாய் ஆதிக்கம் தேவை. துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பெற குருவின் அருள் இருக்க வேண்டும்.
எனவே, ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் சிறப்பு பெற்றுள்ளது என்பதை கணிப்பதுடன், அவர்களுக்கு இளம் வயதில் எந்த தசாபுக்தி நடக்கும் என்பதையும் கணித்து அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும்.
விளையாட்டுகளில் மதிநுட்பமானது எனக் கருதப்படுவது சதுரங்கம் (செஸ்). இது உள்ளரங்க விளையாட்டுகளில் ஒன்றாக வருகிறது. உள்ளரங்கள் விளையாட்டுகளுக்கு புதன் அதிபதி. உலகப் புகழ் பெற்ற முன்னணி தமிழக செஸ் வீரரின் ஜாதகம் என்னிடம் உள்ளது. அதில் சுக்கிரன், புதன், சனி, சந்திரன் ஆகிய 4 கிரகங்களும் கூட்டாக இருக்கின்றன. அதிலும் புதன் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளார். இதன் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக சதுரங்கத்தில் அவரது வெற்றிக் கொடி பறக்கிறது.