மதநல்லிணக்கம் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கிரகங்களின் தசை/புக்தி ஒருவருக்கு நடக்கும் போது அவர் வேற்று மதத்தினரால் ஆதாயம் பெறுவார் அல்லது பலன் அடைவார் எனக் கூறப்பட்டுள்ளது.
வேற்று மதத்தினர், அயல்நாட்டில் வசிப்பர்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களாக சனி, ராகு கருதப்படுகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. அமெரிக்காவுக்கு குருவும், இங்கிலாந்துக்கு சனியும், ஆஸ்ட்ரேலியாவுக்கு புதனும் ஆட்சி கிரகங்களாகத் திகழ்கின்றன.
இதேபோல் ஒவ்வொரு நாடு அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் (பூலோக அடிப்படையில்) அவற்றை ஆளுகின்ற கிரகம் எது என்பதை ஜோதிட ரீதியாக ஆய்வு நோக்கில் பிரித்து வைத்துள்ளோம். அதனை வைத்து, ஒருவருக்கு குறிப்பிட்ட தசாபுக்தி நடக்கும் போது அவர் எந்த நாட்டிற்கு சென்றால் முன்னேற்றம் பெறலாம் என்பதையும் கூறுகிறோம்.
கூட்டு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் ஒரு சிலர் என்னிடம் ஜாதகம் பார்க்க வருகின்றனர். அந்த வகையில் பால்ராஜ் என்ற கிறிஸ்தவரும், சீனிவாசன் என்ற ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரும் என்னைச் சந்தித்தனர்.
இதில் பால்ராஜிற்கு சனி தசையும், சீனிவாசனுக்கு ராகு தசையும் நடந்தது. இதனால் இருவருக்கும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி, ஆதாயம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன். எனவே, புதிய நிறுவனத்தை இருவரும் கூட்டாகத் துவக்கலாம் எனக் கூறினேன்.
தற்போது அவர்கள் இருவரும் கூட்டாக தொழில் துவங்கி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருவருக்கும் இடையில் எந்தவித மனக்கசப்பும் ஏற்படவில்லை. மாறாக இருவரின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது தாய், மகளாகப் பழகும் நிலைக்கு முன்னேறியுள்ளனர்.
ஒரு ஜாதகத்தில் இயக்கும் கிரகங்கள், இயங்கும் கிரகங்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறோம். அதில் ஒரு கிரகம் மட்டுமே இயக்கும் கிரகமாக ( Key planet) ஆக இருக்கும். இரு வேறு நபர்களின் ஜாதகத்தில் இயக்கும் கிரகம் ஒன்றாக இருந்தால் அவர்களிடையே பிரச்சனை வராது. எனவே இயக்கும் கிரகம் ஒத்துப்போனால் வேற்று மதத்தைச் சேர்ந்தவருடன் கூட கூட்டாகத் தொழில் தொடங்கலாம்.