உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடுமையான விரதப்போக்குடன் வாழக்கூடிய பூசாரிகள், சன்னியாசிகளில் ஒரு சிலர் காம லீலைகளில் ஈடுபட்டதாக சிக்கிக் கொள்கின்றனர். இது ஏன்?
பதில்: உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த கிரகங்களின் தசை நடக்கும் போது அவர்கள் பாதை மாறி காம லீலைகளில் ஈடுபட நேரிடும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கு மனோகாரகன் (சந்திரன்) ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் சந்திரனை பலவீனப்படுத்தும் கிரகங்களும் உள்ளன. அதுபோன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது சம்பந்தப்பட்டவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதேபோல் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது பொதுவாகவே காம இச்சை அதிகரிக்கும். அதுபோன்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர் தன்னை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனம் போன போக்கில் காம லீலைகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை, அவமானம் ஆகியவற்றை ஏற்க நேரிடும்.
காம இச்சை அடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொதுவான பரிகாரம் என எதையும் கூற முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்த பின்னரே அவருக்கான பரிகாரத்தைக் கூற முடியும்.
உதாரணமாக, 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது அவருக்கு ஏழரைச் சனி நடந்தால், அவர் எப்படி வாழ்ந்தாலும் காம இச்சைகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கிக் கொள்வார்.
ஒரு சிலர் சொந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என்று மனதில் நினைத்துக் கொண்டு, அண்டை மாநிலத்திற்கும், அயல்நாடுகளுக்கும் சென்று தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் விதியிடம் இருந்து தப்பமுடியாது. மாறாக உடல்நலனைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு தண்டனையாகவே கருதப்படும்.
எனவே, அதுபோன்ற மோசமான தசை நடக்கும் போது மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும்.
ஒரு சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று பலர் கேட்கலாம். எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி இருக்கிறார்கள்.
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.
அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.