ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாலும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதையறிந்த இருவரும் மத்திய அரசு தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
விஜேந்தர், சுஷில் இருவரும் தங்களுக்கு உள்ள திறமை, தகுதியை ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் நிரூபித்து விட்டனர். ஆனால் அப்படியும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது ஏன்?
பதில்: அரசாங்கத்திற்கு உரிய கிரகம் என்றால் சூரியன். எனினும் சூரியனை குரு பார்த்தால் தான் அவர்களுக்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்து, அதனுடன் குரு சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் அவர்களுடைய உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
அப்படியில்லாமல் போனால் நாட்டிற்காக இவ்வளவு செய்தும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படும்.
மேலும், தசா புக்தியும் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவர்கள் கூட அதன் பின்னர் அதனை இழக்க நேரிடுவது (ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்றவற்றால்) கூட நல்ல தசா புக்தி இல்லாத காரணத்தால்தான்.
உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் நல்ல தசா புக்தி தேவை. ஏனென்றால் அப்போதுதான் அங்கீகாரத்திற்கான பரிந்துரையும் செய்யப்படும். ஒருவேளை மோசமான தசாபுக்தி நடந்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் பதக்கத்தை மட்டும் ஏக்கத்தோடு பார்த்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.