திதி, நாள், யோகம், கரணம் என்றெல்லாம் உண்டு. யோகம் என்றால் அமிர்த யோகம், சித்த, மரண யோகம் மட்டுமல்லாமல் வேறு சில யோகங்களும் உண்டு. 27 நாம யோகங்கள் உண்டு. கரணங்களும் உண்டு. அதில் சில யோகங்கள், சில கரணங்கள் சந்திக்கக் கூடிய நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அங்க ஹீனமாக இருக்கும்.
அதுபோல் அலி கிரகங்கள், சனி, புதன் கிரகங்களுடன் சேர்ந்து சுப கிரகங்களின் பார்வை ஏதுமின்றி இருந்தால் அந்த குழந்தை ஊமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சில நூல்கள் புதனும், குருவும் சேர்ந்து வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் ஊமையாக இருப்பார்கள், புதன் கேதுவுடன் சேர்ந்து சனியும் பார்த்தால் செவித் திறன் இன்றி இருப்பார்கள்.
லக்னாதிபதி ராகு, கேதுவுடன் சேர்ந்து 6ஆம் இடத்தில் மறைந்து, சனியாலும், செவ்வாயாலும் பார்க்கப்பட்டால் அவர்கள் உதடு பிளந்த நிலையில் பிறப்பார்கள்.
லக்னாதிபதி 6க்குரியவனுடன் சேர்ந்து 8இல் மறைய லக்னத்தையும், பாவ கிரகங்கள் பார்க்க தட்டையான முகம், குதிரைப்போன்று முகங்களுடன் பிறப்பார்கள்.
சனி, ராகு, கேது, செவ்வாய் கிரகங்கள் குரூரமாக லக்னாதிபதியை தாக்கும்போது லக்னாதிபதி எந்த அளவிற்கு தாக்கப்படுகிறானோ அந்த அளவிற்கு பாதிப்புடைய குழந்தைகள் பிறக்கும். லக்னாதிபதியுடன் புதனும் சேர்ந்து கெட்டுவிட்டால் மன நலமும் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கும்.
இதில் சந்திரன் நிலை மிக முக்கியம். லக்னாதிபதி கெட்டும், சந்திரன் நன்றாக இருந்தால் சின்ன வயதில் இருந்தது, அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்து தற்போது சரியாகிவிட்டது என்று சொல்வார்கள்.
எனவே அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளக் கூடிய குறைபாடுகளைத் தரும் கிரக அமைப்புகளும் அங்கு உண்டு.
இதுபோன்ற சில தசைகள் வரும் போது நிரந்தர ஊனத்தைக் கூட சரி செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும். அதாவது, தீர்க்க முடியாத குறைபாட்டிற்கு, உடல் பிரச்சினைக்கு அப்போதுதான் கண்டுபிடித்த கருவிகளைக் கொண்டு அவர்கள் சிகிச்சையைப் பெற்று அதனை சரி செய்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
எனவே சந்திரன் அல்லது லக்னாதிபதி இருவரில் யாராவது ஒருவர் நன்றாக இருந்தாலும் குறைபாட்டை சரி செய்யும் வாய்ப்பு கிட்டும்.
குழந்தை உருவாகும் நேரம் மிக முக்கியம். தாய் தந்தை இருவருக்கும் ஏழரை சனி நடந்தாலோ அல்லது கேது, ராகு தசைகள் நடந்தாலோ, சனி தசை நடந்தாலோ, சனி தசையில், கேது, ராகு, செவ்வாய் புத்திகள் நடந்தாலோ இருவரும் இணைவதால் உருவாகும் கரு ஊனமுற்றக் கருவாக வாய்ப்புகள் உண்டு. எனவே அந்த சேர்க்கை நேரம் மிக முக்கியம்.
ஒரு தம்பதிகள் வந்திருந்தார்கள். அவர்களது இரண்டு குழந்தைகளும் மன நலம் குன்றிய குழந்தைகள். மூன்றாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
அந்த இரண்டு குழந்தைகளும் உருவான கால கட்டம் பார்த்தால் தாய் - தந்தைக்கு மோசமான தசா புக்தி நடக்கும் போது அந்த கருக்கள் உருவாகியுள்ளன. அதாவது அந்த குழந்தைகளின் பிறந்த தேதிக்கு 10 மாதங்கள் முன் கூட்டிப் பார்த்தால் அந்த கரு உருவான நேரத்தை அறியலாம்.