Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல திடகாத்திரமாக இருப்பவர் திடீரென நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாவதன் காரணம் என்ன? எப்படி முன்னறிவது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (16:08 IST)
நேற்று இரவு வாசன் என்ற கல்லூரி பேராசிரியர் வந்திருந்தார். தனது மனைவியின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருந்தார்.

அதைப் பார்த்துவிட்டு, எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இப்போது கேன்சர் இருக்கிறது என்றேன்.

அவர் உடனே என் கையைப் பிடித்துக் கொண்டு அதை எப்படி சொல்கிறீர்கள்? கேன்சர் இருக்கிறது என்று குறிப்பாக சொல்ல முடியுமா என்று கேட்டார்.

அதற்கு, உங்கள் மனைவி தனுசு லக்னத்தில் பிறந்துள்ளார். இப்போது அவருடைய லக்னாதிபதி குருவுடன் ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கின்றன. அப்படி இருந்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் என்றேன்.

உடனே அவர், திருமணத்திற்கு முன்பு இந்த ஜாதகத்தைக் காண்பித்திருந்தால் புற்றுநோய் வரும் என்று கூறி திருமணம் செய்யக் கூடாது என்று அப்போதே சொல்லியிருப்பீர்களா என்று கேட்டார்.

ஆமாம் என்றேன்.

இரண்டு பேரின் ஜாதகத்தைப் பார்க்கும்போது ஒருவருக்கு இதுபோன்ற பிரச்சினை இருந்தால் இந்த ஜாதகம் வேண்டாம் என்று மட்டுமே கூறுவோம். மற்றபடி இந்த விஷயங்களைச் சொல்வதில்லை. நம்மிடம் வந்தவர்கள் - ஜாதகத்தை கொடுத்தவர்களிடம் இதனைச் சொல்லி பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்பதால் அதனை சொல்வதில்லை.

அந்த பேராசிரியர் தனது மனைவியின் ஜாதகத்தை எங்கெங்கோ எல்லாம் காண்பித்துவிட்டு கடைசியாக இங்கு வந்துள்ளார். ஒரு வி.ஐ.பி.தான் உங்களது முகவரியை கொடுத்ததாகவும், அவரது பெயரை சொல்லவேண்டாம் என்றும் கூறினார்.

புற்றுநோய் இப்போதுதான் துவங்கியுள்ளதா என்று கேட்டார். இல்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் ஆரம்பித்துவிட்டது. இப்போது சிகிச்சை அளித்து குணமாக்கிவிடுவீர்கள். நன்றாக இருப்பார்கள்.

ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்நோய் தாக்கும். ஆனால் அப்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிடுவார் என்றும் கூறினேன்.

விதை ஊன்றுகிறோம். அதற்கேற்ற சூழல் வரும்போது விதை முளைப்பது போல், பிறக்கும்போதே கர்ம வினைகளுக்கேற்ப நோய், விபத்து, ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.

பிறந்த கிரக அமைப்புகள் பலவீனமாகும்போதும், நடைமுறை கிரக அமைப்புகள் பலவீனமாகும்போதும், குடும்பத்தில் தன்னைச் சார்ந்த உறவுகள், அதாவது கணவன், மனைவி, பிள்ளைகளின் கிரக அமைப்புகளும் பலவீனமடையும்போதும் அந்த காலக்கட்டத்தில் பெரிய நோய்க்கு ஆளாவார்கள்.

தனி மனித ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பில், ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்றவை வரும், அப்போது கோச்சார கிரகங்களை வைத்து இந்த வயதில் இந்த நோய் வரும் என்று சொல்லிவிடலாம். எனவே முன்கூட்டியே எந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான நோய் வரும் என்று சொல்லிவிடலாம்.

உதாரணமாக தனுசு ராசிக்கெல்லாம் 8இல் செவ்வாய் இருக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு பலன் எழுதும்போது 8இல் செவ்வாய் இருப்பதால் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும், கை, கால்களில் காயம் ஏற்படும் என்கிறோம்.

நமக்கு தெரிந்த ஒருவரிடம், கொஞ்ச நாட்களுக்கு அதாவது அடுத்த மாதம் 23ஆம் தேதி வரை பார்த்து கவனமாக இருங்கள். விபத்துகள் நேரிடும் என்று சொல்லியிருந்தேன். அவர்கள் ஊட்டிக்குப் போனார்கள். அங்கு விபத்து ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனுசு ராசிக்கு தற்போது ஜென்ம குரு. 8இல் செவ்வாய் வரும்போது அடி, நூலிழையில் உயிர் தப்பித்துள்ளார். கோமா நிலைக்கு போய் ஒரு வாரம் கழித்து உணர்வு வந்துள்ளது. இதுபோல பெரிய நோய்கள், விபத்துகளை எல்லாம் முன்னரே கண்டறிந்து கொள்ளலாம்.

பழைய நூல்களில் அதாவது தீபிகை, கிரகச்சாரம், சுக்கிர நாடி போன்ற நூல்களில் லக்னப் பலன், ராசிப் பலன் என பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 33இல் சுரத்தால் கண்டம், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சளியால், வயிற்று நோயால் தொந்தரவு, எந்தெந்த வயதில் கண்டம் என்று பொதுவாக சொல்லியிருப்பார்கள்.

பொதுவாக சொல்லியிருப்பதும் பலிக்கும். அவர்களுக்கு அந்த நேரத்தில் தசா புக்தி சரியாக இல்லாவிட்டால் அவை அப்படியே நடக்கும். எனவே நோய், விபத்து போன்றவற்றை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்.

இதனை கண்டுபிடித்து பரிகாரம் செய்து தடுத்து விடலாமா?

முன்னர் சொன்ன அந்த பேராசிரியரும், மனைவிக்கு புற்றுநோய் என்றதும் என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அவரது மனைவிக்கு நெருப்புக் கிரகங்கள் பலவீனமாக உள்ளன. எனவே அக்னி தலத்திற்கு - இப்போது அக்னித் தலம் என்றதும் திருவண்ணாமலையைச் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக அக்னித் தலம் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரம் பெண்களுக்கு அக்னி மூலம்.

எனவே திருமூலரின் சமாதி இருக்கும் சிதம்பரத்திற்கு கூட்டிச் செல்லுங்கள். அர்த்த ஜாம பூஜையை பார்க்க வையுங்கள். மாதா மாதம் சிதம்பரம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளேன்.

அவர்களது ஜாதகத்திற்கு, கிரக அமைப்பிற்கு சிதம்பரம் செல்வதுதான் பரிகாரம். இதுவே எல்லோருக்கும் பொருந்தாது.

பின்னாளில் வரக்கூடிய தசா புக்திகளுக்கும் சேர்த்து சிதம்பரம்தான் பரிகாரம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments