Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (15:58 IST)
ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன? இவைகளை நிழல் கிரகங்கள் என்றுதானே கூறுகிறார்கள், அப்படியானால் எப்படி பெயர்ச்சி நிகழும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன ்:

webdunia photoWD
ராகு, கேது பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ராகு, கேது கிரகங்கள் மிக வலிமையான கிரகங்கள், வேதியியல்படி பார்த்தால் கிரியா ஊக்கி என்று சொல்வார்கள். சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் அவைகள் வராது. கிரியா ஊக்கிகள் போல்தான் ராகு, கேது.

எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதன் குணத்தைப் பிரதிபலிக்கும். நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலன்களும், கெட்ட கிரகங்களுடன் சேர்ந்தால் கெட்ட பலன்களும் அதாவது மிகப் பயங்கரமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.

தற்கொலை செய்து கொள்வது எல்லாம் பார்த்தால் இந்த கேது புக்தியில்தான்.

அறிவியில் பூர்வமாகப் பார்த்தால் ஆஸ்ட்ரைட்கள் என்று இவைகளைக் கூறலாம், மற்ற கிரகங்களுடன் சுற்றுப் பாதையில் ஏற்படக் கூடிய துகள்களின் தொகுப்புதான் ராகு, கேது என்றழைக்கப்படும் தூசு மண்டலம்.

குரு என்றால் மின்னணுக் கதிர்களால் ஆனது. கந்தப் புலன் அதிகம். காந்தப் புலன் கொண்ட கோள் சுழலும்போது அதில் இருந்து துகள்கள் வெளிவரும். அவை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கிரகமாக உருவாகிறது.

சூரியன் இருக்கிறது, சூரியனுக்கு சுற்றுப்பாதை உண்டு. ராகு, கேதுவிற்கு சுற்றுப் பாதை இல்லை. அதனால்தான் இவற்றை நிழல் கிரகம் என்று சொல்கிறார்கள்.

ராகு, கேது ‌எதிர்திசையில் பயணிக்கும் என்பது?

ராகு, கேது கிரகங்களுக்கென்று தனியாக ஒரு பாதை இல்லை. இவை ஏதோ ஒரு பாதையில் சுழலும், ஒரு முறை எதிர்படும் இந்த கிரகங்கள், ஒரு சமயம் ஒரே பாதையிலும் செல்லும்.

இதனைத்தான் எதிர்திசையில் பயணிக்கின்றன என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சூறாவளி வரும்போது காற்றில் ஏற்படும் தூசுகள் அந்த சூறாவளியில் சூழல ஆரம்பிக்கும். அப்போது பூமியி‌ல் ஒரு பகுதி தூசும், வானத்தில் ஒரு பகு‌தி தூசும் சுழன்று கொண்டிருக்கும். இதே தான் ராகு, கேது வாகும்.

கிரகணம் இவைகள் பாம்பாக சித்தரிக்கப்பட்டு சூரியனை விழுங்கி விட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது ஆதி காலத்தில் கிரகங்கள் தோன்றும்போது பாம்பு வடிவில் தோன்றியிருக்கின்றன. கிரகணம் என்பது மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீதோ அல்லது சூரியன் மீதோ விழும்போது கிரகணம் ஏற்படுகிறது.

வால் நட்சத்திரங்கள் உருவாவதெல்லாமும் தூசுப் படலங்களின் தொகுப்புதான். கார்பன், கார்பன் மோனாக்சைடு போன்றவை இருக்கும். அதன் மீது ஒளிக் கற்றைகள் படும்போது அவை மின்னும்.

மின்னுதல் என்பது நிரந்தரமான மின்னுதல் அல்ல. தோன்றி மறையக் கூடியதுதான்.

எனவே வால் நட்சத்திரங்களும் ராகு, கேது பிரிவைச் சேர்ந்தவைதான்.

குருவிற்கு 19, சனிக்கு 23 துணைக்கோள்கள். ராகு, கேதுவிற்கு துணைக் கோள்களாக இந்த வால் நட்சத்திரங்களை வைத்துக் கொள்ளலாம்.

தூசுகள் என்றால் சிறிய கற்களா?

webdunia photoWD
நிக்கல் போன்றவைதான் ராகு, கேதுவில் உள்ளது. இரும்பு சனியிடம் இருக்கிறது என்றால் இரும்பு ஆக்சைடு, இரும்பு டை ஆக்சைடு போன்றவை ராகு, கேதுவில் உள்ளன. மேலும் எலுமிச்சைப் பழம் என்று எடுத்துக் கொண்டால் அதன் தோல் ராகு, கேதுவிடம் இருக்கிறது. சில நேரங்களில் சிலிகான் 90% இருக்கும். ஒரு சில நேரத்தில் 20% தான் இருக்கும். எனவே துகள்களின் தொகுப்பு என்பதால் இவை எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கும். மேலும் நீள்வட்டப் பாதை இல்லை. குறுக்கு நெடுக்காகச் செல்லும். அதனால் வேண்டுமானால் பாம்பாக உருவகம் செய்திருக்கலாம்.

வளைந்து, நெளிந்து போவதன் இயல்பைக் கொண்டு ராகு, கேதுவை பாம்பாகக் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

மேஷம் என்றால் ஆடு. இப்போ பிர்லா கோளரங்கத்தில் போய் பார்த்தால் மேஷ நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தால் அவை வடிவில் ஆடு போன்று காணப்படுகின்றன.

இவ்வளவு குணம் கொண்ட ராகு, கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு ஓஷோ போல, நல்லா அனுபவிக்கவிடுவார், பின்னர் எல்லாம் போன பிறகு என்னிடம் வருவாய் என்பது போல் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும். ஆனால் கேது ரொம்ப கண்டிப்பானவர். எவ்வளவு பெரிய மாளிகையில் இருந்தாலும் கயிற்றுக் கட்டிலில்தான் படுப்பேன், பல வகையான உணவு இருந்தாலும் கஞ்சிதான் குடிப்பேன் என்பது போல் இருக்க வைப்பார்.

ராகுவுக்கும், கேதுவுக்கும் இருவேறு குணங்கள். ராகு எதுவாக இருந்தாலும் அனுபவிக்கணும். இந்த காலத்தில்தான் மது பானம் அருந்துதல், பிறர் மனை நோக்குதல் போன்றவை இருக்கும். வேலை செய்த கம்பெனியையே வாங்குவதும் இந்த காலத்தில்தான்.

நல்ல இடத்தில் எல்லாம் ராகு இருந்துவிட்டால் போதும் ராஜ யோகம்தான். வலிமையான ராகு நல்ல கிரகமாக அமைந்துவிட்டால் சுகபோக வாழ்க்கை, உயர்தர வாகனம் கிடைக்கும்.

கேது என்று பார்த்தால் அது பெரும்பாலும் கெடுதல் தான் செய்யும். குருவுடன், சுக்கிரனுடன், சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டும் தன்னுடைய தசையில் கெடுதலைக் குறைத்து நல்ல பலன்களை அளிக்கும்.

என்னுடைய அனுபவத்தில் இதுவரை இரண்டு பேருக்குத்தான் கேது நல்லது செய்துள்ளது. ஒருவர் பெரிய தொழிலதிபராக இருக்கிறார். மற்றொருவர் மிகப்பெரிய அரசியல் தலைவராக உள்ளார். இவர்கள் இருவர் மட்டுமே கேதுவின் பலன்களை அடைந்து வருகிறார்கள்.

அது எப்படி என்று பார்க்கும்போதுதான் மீன லக்னம், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேது சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மீனத்திற்கும், கடகத்திற்கும் கேது ஒன்றும் செய்யாது. ஆனாலும், பதவி, புகழ் இருந்தாலும் அவர்களுக்கு நிம்மதியான தூக்கம், அமைதி இருக்காது. எனவே கொடுத்தும் கெடுப்பான் கேது என்பது உண்மை.

ராகு சுகபோகம் என்றால், கேது விரதம் மேற்கொள்வது, ஈரத் துணிக் கட்டிக் கொண்டு உண்ணாமல் இருப்பது போன்றவை செய்யும்.

ஜாதகம் பார்க்கும்போது ராகு, கேது இரண்டையும் பார்க்க வேண்டுமா?

ஆம். இரண்டையும் பார்க்க வேண்டும். ஒரு இரண்டரை வயதான குழந்தைக்கு தற்போது கேது தசை நடக்கிறது. அவரது அப்பா பெரிய தொழில் நடத்திவந்தார். பயங்கர கடனாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது சென்னையில் தலைமறைவாக இருக்கிறார்.

இதுபோன்ற சமயங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது, குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது, அடிமைத் தொழில் செய்வது போன்றவை பரிகாரங்கள். இதை யாரும் கேட்பதில்லை. எப்படி என் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பேன் என்று கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு பின்னர் அவர்களது நேரமே அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்துச் செல்லும். எனவே முதலிலேயே நல்லபடியாக பிரிந்து சென்றுவிடுவது நல்லது.

சிலருக்கு பார்த்தால் சூரியனோடு ராகு, சந்திரனோடு கேது இருக்கும். அவர்களுக்கு ஒரு சில ஆண்டுகள் நன்றாக இருக்கும். பின்னர் அப்படியே நிலைமை தலைகீழாகி பின்னர் சீராகும். திரும்பவும் கவிழ்த்துவிடும். இதுபோலவே அதன் ஓட்டத்திலேயே நம்மையும் எடுத்துச் செல்லும்.

இதனால்தான் சனிக்குப் பிறகு அதிகம் பயப்படுவது இந்த ராகுவிற்கும், கேதுவிற்கும்தான். ராகு, கேதுவைப் பொருத்தவரை கொஞ்சம் அவஸ்தைப் பட்டுத்தான் பலனை அனுபவிக்க முடியும்.

நல்ல வசதியாக இருக்கும்போதே இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்து லாபம் சம்பாதிக்கலாமா என்று எண்ணுவது ராகு, வறுமையில் இருந்தாலும் சிறுமைப்படாமல் வாழ வைப்பது கேதுவின் குணம்.


ராகு, கேது பெயர்ச்சிக்கு பொதுப்பலன் எப்படி சொல்வது?

100 விழுக்காடு சொல்லலாம். ஏனெனில் ராகுவின் குணம் அப்படி.

ராகுவும், கேதுவும் நேரெதிர் குணங்களைக் கொண்டவை, இவை இரண்டும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி அடைகின்றன. ஒவ்வொன்றும் 180 டிகிரி, 180 டிகிரி தொலைவில் இருக்கின்றன.

சூறாவளியைத்தானே ராகு, கேதுவிற்கு உதாரணமாகக் கொள்கிறோம். அப்படியேப் பார்த்தால் ராகு உச்சத்தில் பறந்து கொண்டிருக்கும் நான்கு காகிதம். கேது என்றால் கீழே சுழன்று கொண்டிருக்கும் காகிதம். மேலே பறக்கும் காகிதம் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலையும் தராது. தூசு மக்களின் கண்களில் படாது. ஆனால் வியப்பைத் தரும். அந்த காகிதம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்ற வியப்பைத் தரும்.

கீழ சுழல்கிற காகிதம்தான் போகிற வருகிறவர்கள் மீது பட்டு, கண்களை மறைத்து அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிடும்.

அதாவது தூசு என்பதும் காற்று என்பதும் ஒன்றுதான். ஆனால் மேலே பறக்கும் காகிதம் உடனடியாக எந்த கெடுதலையும் செய்வதில்லை. ஆனால் கீழே பறப்பது கெடுதலை செய்கிறது. இரண்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.

சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகள் மனித சிந்தனையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. சனி பகவான் என்று எடுத்துக் கொண்டால் மகரம், கும்பம் மட்டும்தான் சொந்த வீடு. மற்றவை எல்லாம் வேற்று கிரகங்களின் வீடுகளில்தான் பயணிக்கும். வேற்று கிரகங்களின் வீடுகளில் பயணம் செய்யும் போது மாற்று பலன்களை மனிதர்களுக்கு உருவாக்குகிறது.

சனிக்கு பகை வீடுகள் கடகமும், சிம்மமும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடகத்தில் இருந்தது. தற்போது சிம்மத்திற்கு வந்துள்ளது.

சனி தொழிலாளர்களுக்குரியவர். பகை வீட்டில் அமர்ந்திருக்கும்போது தொழிலாளர்களே கிடைக்க மாட்டார்கள். இது கன்னி, துலாம் வரைக்கும் இப்படியேத்தான் இருக்கும். விருட்சிகம் வரும்போதுதான் ஓரளவிற்கு தொழிலாளர்கள் தர‌ம் அ‌ல்லது நிலை குறையும். அதாவது கம்பெனி மூடுதல் போன்றவை ஏற்படும்.

குரு தங்கத்திற்குரியவர். சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதால் வரலாறு காணாத விலை உயர்வு. ஆனால் டிசம்பரில் நீச்சம் அடைகிறார். அப்போது தங்கத்தின் விலை குறையும்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் குரு நீச்சமடையும்போது நிதி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டன. தங்கத்தின் விலை குறைந்தது. பணத்தை ஏமாந்தவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுபோலத்தான் குருவும் ஒவ்வொரு கிரகத்தில் பயணிக்கும்போதும் ஒவ்வொரு நிலையை ஏற்படுத்தும்.


ராகு, கேது பெயர்ச்சி பொதுவாக என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும்.

உலகளவில்

உலகளவில் தற்போதிருந்த மோசமான நிலை மாறும். நல்ல பலன்களை அளிக்கும்.

மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை விலக்கும். போலித்தனமாக வாழ்க்கையை நீக்கும்.

கடகத்தில் கேது, மகரத்தில் ராகு இருப்பது கொஞ்சம் ஸ்நேகமான போக்கு. எனவே மக்கள் போலித்தனத்தில் இருந்து விலகி நிஜத்திற்கு வருவார்கள்.

இளைஞ‌ர்க‌ள்

கேது ஆன்மீகத்திற்குரிய கிரகம். அது கடகத்தில் உட்கார்ந்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். யோகா, தியானம் போன்றவற்றில் அவர்களது ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் ராகு மகரத்தில் உட்காருவதால் தொழிற்சாலைகள் பெருகும். தொழில் துவக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த ராகு, கேது பெயர்ச்சி நாட்டிற்கு நல்லது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து. கடகமும், மகரமும் கடல் வீடுகள். இவற்றில் ராகு, கேது அமர்வதால் மீண்டும் சுனாமி ஏற்படக் கூட வாய்ப்பு உண்டு அல்லது கடல் வாழ் உயிரினங்கள் வெளியேற்றப்படுதல், அறிய உயிரினங்கள் அழிவது, கடல் கொந்தளிப்பு அதிகமாக நிகழும்.

சமூக அளவில்

சாதாரண மக்கள் பலனடைவார்கள். கீழ்த்தட்டு மக்களை உயர்த்தும். அதே சமயம் மேல் தட்டு மக்களை மேலும் உயர்த்தும். அதுதான் ராகு, கேதுவின் குணம்.

தனி மனிதர்

ரிஷப ராசிக்கு யோகத்தைக் கொடுக்கும். சிம்மம் விடுதலையடைகிறார்கள். நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கன்னிக்கும் நன்றாக இருக்கிறது. மீன ராசிக்கும் பரவாயில்லை.

ரொம்ப கஷ்டமாக இருக்கப் போவது கடகம், மகரம். எந்த வீடுகளில், கிரகங்களில் இருக்கிறதோ அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

ராகு, கேது அமர்ந்திருக்கும் ராசிக்காரர்களுக்கு ரத்தத் தொடர்பான நோய்கள் வரும். இரும்புச் சத்து குறையும், உடல் பருக்கும், சக்தி குறையும். தலைசுத்தல் ஏற்படும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments