கல்வராயன் மலைப்பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சருடன் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.