கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட எஸ்விஎஸ் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மற்றும் மோனிஷா ஆகியோர் கடந்த மாதம் 23 ஆம் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர்.
பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் முதலில் தற்கொலை என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட விசாரைணையில், அந்த கல்லூரி உரிய அனுமதி இன்றி செயல்பட்டது என்றும், கல்லூரியில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது என்றும் தெரிய வந்தது.
மேலும், அதிக கட்டணங்களை கேட்டு மாணவர்கள் மிரட்டப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கல்லூரிக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிணமாக மீட்கப்பட்ட மாணவிகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், சரண்யாவின் பெற்றோர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். சரண்யாவின் தந்தை ஏழுமலை தனது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரண்யாவின் உடலை பாதுகாக்க உத்தரவிட்டிந்த நிலையில், இன்று சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, எஸ்விஎஸ் கல்லூரியில் படித்த மாணவர்கள் அரசு கல்லுரிக்கு மாற்ற அணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.