தனக்கு பின்னால், தன்னுடைய குடும்பத்திலிருந்து, அரசியலுக்கு யாரும் வர வாய்ப்பில்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எல்லோராலும் கூறப்படுகிற ஒன்று. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் பேசும் மேடை தோறும் தவறாமல் அதையே குறிப்பிடுவார்.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சியில், பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது திமுக குடும்ப அரசியல் நடத்துகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்த போது “ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவை தன்னுடனே வைத்துக் கொண்டு குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதை மூடி மறைப்பதற்காகவே அவர் திமுக மீது இப்படி ஒரு உத்தியைக் கையாள்கிறார். நான் 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறித்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
எனவே என்னை வைத்து அவர் இப்படி சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், என்னுடைய மகனோ அல்லது மருமகனோ, எனக்கு பின்னால் என்னுடைய குடும்பத்திலிருந்து நிச்சயம் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்” என்று கூறினார்.