விருதுநகரில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது என்றார். ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள் என்று தெரிவித்த அவர், விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது என்று கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு என்றும் பொறுப்பில்லாமல் அவர் பேசுவதாகவும் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார்.
மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது என்றும் விஜயகாந்த் இருக்கும் பொழுது தேமுதிக விருதுநகர் தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.