Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணன் மறைவு - சீமான் வேதனை!!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (13:36 IST)
நெல்லை கண்ணன் அவர்களது மறைவென்பது தமிழ்அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என சீமான் வேதனை. 
 
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், காப்பியங்களையும் முழுதாய் கற்றறிந்து, அவற்றை மக்கள் மொழியிலேயே, எளிய நடையிலேயே மேடைகளில் எடுத்தியம்பும் பேராற்றல் கொண்ட ஈடுஇணையற்ற தமிழ்ப்பேரறிஞர், தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ எனப் போற்றப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைபாட்டால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகையும், தமிழக அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட ஒப்பற்ற பெரும் ஆளுமையான அப்பா நெல்லை கண்ணன் அவர்களது இறப்புச்செய்திகேட்டு மகனாய் கலங்கித் தவிக்கிறேன்.
 
நாடறியப்பட்டப் பேச்சாளராக மட்டுமல்லாது, மண்ணின் மீதும், மக்களின் மீதும் பெரும் பற்றுகொண்ட அரசியல் ஆளுமையாகவும் திகழ்ந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களது மறைவென்பது தமிழ்அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் என் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் பெருத்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்த அப்பாவின் இழப்பு என்னை நிலைகுலையச் செய்திருக்கிறது.
 
எப்போது அழைப்பெடுத்தாலும் ‘வாழ்க தமிழுடன்’ என்று அன்னைத் தமிழில் அன்புடன் உரையாடுவார். என் தந்தையார் செந்தமிழன் மறைந்தபோது அலைபேசியில் அழைத்து, தைரியமாக இரு! நெல்லையில் உனக்கொரு அப்பா இருக்கிறேன். அதை நினைவில் வைத்துக்கொண்டு இயங்கு, தளர்ச்சி இல்லாமல் ஓடு என்று ஆற்றுப்படுத்தியவர். மாமா காளிமுத்து அவர்களோடு நெருங்கி பழகியவரென்பதால் என் மனைவி கயல்விழியை அண்ணன் மகள் என்றே அழைத்து மிகுந்த அன்பு செலுத்தியவர். பேசும் பொழுதெல்லாம் படியப்பா! படியப்பா! நல்லா படியப்பா! என்று தனது புத்தகம் படிக்கும் பழக்கத்தை எங்களுக்கும் கடத்திய அறிவுப்பெட்டகம். அப்படிப்பட்ட தகப்பானரை இழப்பது எனக்கு மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு.
 
உலகின் மிக மூத்த மொழியாகிய என்னருமை தமிழ்த் தாய், தனது அருமைப்பிள்ளைகளில் ஒரு செல்லமகனை இழந்திருக்கிறாள். மகனை இழந்ததனால் தமிழ்த்தாய்க்கு என்ன துயர் நேர்ந்துள்ளதோ, அதே துயர் அவர் பெற்ற பிள்ளைகள் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
 
மீளாத்துயரத்தோடு புலம்பிக்கொண்டிருக்கின்ற என்னுடைய உடன் பிறந்தார்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அப்பாவின் தமிழ் அள்ளிப்பருகிய தமிழ் இலக்கிய உலகத்துக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments