Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை ரத்து செய்க – சீமான்!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (08:32 IST)
முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.


இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 299 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நடைபெற்ற நேர்முகத்தேர்வில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து தமிழர்களை முற்றாகப் புறக்கணிகக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தியாவின் முதன்மையான பத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் சொந்த நிலங்களை முழுவதுமாக விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடித் தமிழர்களின் நிலை மட்டும் இன்றுவரை பரிதாபகரமாக உள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தற்போது நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் அடிமாட்டுக்கூலிகளாக, ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, வடவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் வடவர்களே நியமிக்கப்பட்டு, மண்ணின் மைந்தர்கள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது.

நிலக்கரி எடுக்க நிலம் வழங்கிய தமிழ் குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களைப் பணியில் சேர்க்காமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்ற என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு மிக்கச் செயல்பாடானது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொறியாளர் பணிக்கான நேர்முகத்தேர்விற்கு நெய்வேலி நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட 1500 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் மட்டுமே பங்கேற்க அழைக்கப்பட்டனர். தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்காததை நாம் தமிழர் கட்சி அப்போதே கடுமையாகக் கண்டித்ததோடு, நிறுவனத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பொரியாளர்களில் ஒருவர்கூடத் தமிழரில்லை என்பது என்எல்சியின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் தொடர்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. தமிழகப் பொறியாளர்கள் திறமையானவர்கள் எனப் போற்றப்பட்டு உலக அளவில் பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெறும்நிலையில், தமிழ்நாட்டில் தமிழ் மண்ணின் வளத்தினை மூலதனமாகக் கொண்டு, தமிழர்களின் இரத்தத்தில் உருவான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழகப் பொறியாளர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினை தட்டிப்பறிக்கும் வகையில் ஏற்கனவே தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், தற்போது தமிழக பூர்வகுடி மக்களின் நிலங்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்எல்சியிலும் பணிவாய்ப்பினை வடவருக்குத் தாரைவார்ப்பது தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இனியும் இதுபோன்று தமிழரின் உரிமைகள் கண்முன்னே பறிபோவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, முறைகேடாக நடைபெற்றுள்ள என்எல்சி பொறியாளர் தேர்வினை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக இரத்துச் செய்து உத்தரவிடுவதோடு, தேர்வு முறைகேடுகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்கினை கொண்டுள்ள தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தலையிட்டுப் பறிபோகும் தமிழர்களின் உரிமைகளைக் காக்க வேண்டுமென்றும், எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments