Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள் - சரத்குமார்

ஜெயலலிதாவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள் - சரத்குமார்
, வியாழன், 28 மே 2015 (20:01 IST)
ஜெயலலிதாவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்தார்.
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆலோசனைக் கூட்டமும், தேர்தல் நிதி அளிப்பு நிகழ்ச்சியும் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சரத்குமார், கட்சித் தொண்டர்களிடமிருந்து தேர்தல் நிதியைப் பெற்றுக் கொண்டார்.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே எங்களது ஆதரவு. அங்கு அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். அங்கு ஜெயலலிதாவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள். கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். மேலும், விஷன் 2023 திட்டமானது வருங்காலத்தில் தமிழகத்தை முன்னேற்றும் சிறந்த திட்டமாகும். இந்தத் திட்டத்தால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
சேலம் மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்தத் தீர்மானத்தை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இதற்கு  திமுக உறுப்பினர்கள் வேண்டுமென்றே இடையூறு செய்யும் விதமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்தான் மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசியுள்ளார். ஆனால் அதற்கு அடுத்த நாளே திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இப்படி இருக்கும் போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பதைக் கூற இயலாது. மேலும், கூட்டணி குறித்து அந்தந்த கட்சிகளை சேர்ந்தவர்களே முடிவெடுக்க முடியும்.
 
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதால், வெளிநாட்டினர் அதிகளவில் நமது நாட்டுக்கு வந்து தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்து வருகிறார். ஆனால் அவர் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றுகிறது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil