கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன, மதனின் முதல் மனைவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன், திடீரென மாயமானார். அவர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எராளமான பேரிடம் சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்து விட்டார் என்று செய்திகள் வெளியானது.
ஏற்கனவே தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி, மதனின் இரண்டாவது மனைவி சுபலதா நேற்று முன் தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மதனின் முதல் மனைவி சிந்து நேற்று கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு எனக்கும் எனது கணவர் மதனுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு பிளஸ்-1 படிக்கும் வேதிகா என்ற மகள் இருக்கிறாள். அவர் காணாமல் போனதை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. காணாமல் போன எனது கணவர் மதனை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல்கள் செய்திகளாக வெளிவருகின்றன. அவர் பண மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். மோசடி செய்யும் அளவுக்கு அவர் மோசமானவர் அல்ல.
எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிற்கு எனது கணவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த மிரட்டலும் சிலரது தூண்டுதலும்தான், எனது கணவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
அவரிடம் பேட்டியெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவரால் பேச முடியவில்லை.