ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசு பின்னர் நிரந்தர சட்டமாக சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் சார்பாக அதன் வழக்கறிஞர் அஞ்சலி சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் அஞ்சலி இந்த மனுவை தாக்க செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலி சர்மாவுக்கு, வழக்கை வாபஸ் பெற கோரி கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அஞ்சலி சர்மா கூறியதாவது:-
நான் மனு தாக்கல் செய்யவில்லை, 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான். இதை விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை. அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என கூறியுள்ளார்.